சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெஞ்சல் புயலின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை ஓரளவிற்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் கூட உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்து, ரூ.10 லட்சம் என அறிவிக்க கோருகிறோம். மேலும் விவசாயம் பாதிப்பிற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் என்பதனை மறுபரிசீலனை செய்து ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
மழை, வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அனைத்துவகை நிவாரண நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பாதிப்பில் இருந்து முழுமையான மீட்பு பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரண நிதியினை ஒன்றிய அரசு கடந்த காலங்களைப் போன்று தமிழகத்தை புறக்கணிக்காமல் முழுத்தொகையையும் தாமதமின்றி உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.