இரும்புலிச்சேரி பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்காலிக பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு: 5 கிராம மக்கள் கடும் அவதி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தற்காலிக பாலாற்று பாலம் உடைந்து போக்குரவத்து துண்டிக்கப்பட்டதால், 5 கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பாலாற்றின் குறுக்கே சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த, பாலத்தை பயன்படுத்தி இரும்புலிச்சேரி, அட்டவட்டம், சாமியார் மடம், சின்ன எடையாத்தூர், கல்குளம் உள்ளிட்ட 5 கிராம மக்கள் சென்று வந்தனர்.

இந்த பழமையான பாலத்தின் பல பகுதிகள் அங்கங்கு உடைந்துப்போய் போக்குவரத்துக்கு லாயக்கற்ற பாலமாக காணப்பட்டது. இதனால் இப்பாலத்தை பயன்படுத்தி சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வந்தனர். இந்த பழமையான பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் தரமான உயர்மட்ட மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென்று இப்பாலத்தால் பயன்பெறும் 5 கிராம மக்களும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று மழை வெள்ளத்தில் இப்பாலம் முற்றிலும் அடித்து சென்றது.

இதனால், 5 கிராம மக்களும் போக்குவரத்துக்கு வழியின்றி முடங்கினர். பாலாற்றில் தண்ணீர் வடிந்தவுடன் உடனடியாக மேம்பாலம் கட்டப்படும் என்று அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். அதுவரை 5 கிராம மக்களும் போக்குவரத்துக்கு பயன்படுத்த உடைந்த பாலத்திற்கு சற்று தூரத்தில் பாலாற்றின் குறுக்கே பெரிய, பெரிய பைப்புகளை அடுக்கி, அதன் மீது மண்கொட்டி தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், மேம்பாலம் கட்டாததால் ஆண்டுக்கொருமுறை ஏற்படும் பாலாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் மூழ்கி விடும், பாலாற்றில் தண்ணீர் வடியும் வரை மக்கள் சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றி திருக்கழுக்குன்றம் மற்றும் கல்பாக்கம் உள்ளிட்ட நகர்புறங்களுக்கு சென்று வந்தனர். இதனால், மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் புதிய, தரமான மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென்ற மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பழைய பாலம் இருந்த அதே இடத்தில், தரமான மேம்பாலம் கட்ட கடந்தாண்டு ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, கடந்த சில தினங்களாக பெஞ்சல் புயல் காரணமாக பெய்து வருகின்ற கன மழையால் திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பாலாற்றில் மழை வெள்ளநீர் ஓடுகிறது.

நேற்று ஆற்றில் வெள்ளம் அதிகரித்து ஆர்ப்பரித்து ஓடுவதால் இரும்புலிச்சேரி பாலாற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலத்தின் ஒரு பகுதி உடைந்தும், பாலத்தை மூழ்கும் அளவுக்கு வெள்ளநீர் செல்வதாலும் அந்த தற்காலிக பாலத்தை பயன்படுத்தி பயணிக்க இயலாமல் மீண்டும் 5 கிராம மக்களும் முடங்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே, வெள்ளநீர் வடிந்தவுடன் அவசர பணியாக இந்த தற்காலிக பாலத்தின் உடைந்த பகுதியை சீர்செய்ய வேண்டுமென்றும், அடுத்த ஆண்டு ஆற்றில் வெள்ளம் வருவதற்குள் புதிய மேம்பால பணியை போர்கால அடிப்படையில் கட்டி முடித்து போக்குவரத்துக்கு திறந்து விட வேண்டுமென்றும் அரசுக்கு 5 கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* வாயலூர் பாலாற்று தடுப்பணையில் குளிக்க தடை
‘பெஞ்சல்’ புயல் எதிரொலியால், கடந்த சில தினங்களாக திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. பாலாற்றில் நாளுக்குநாள் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வல்லிபுரம் மற்றும் வாயலூர் பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி, உபரிநீர் வேகமாக வெளியேறி வருகிறது. ஆபத்தை உணராமல் சிறுவர்களும், வாலிபர்களும், பொதுமக்களும் சிலர் ஆர்வ மிகுதியால் தடுப்பணையில் குளிப்பதால் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கும் வகையில், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின்பேரில் தடுப்பணையில் யாரும் குளிக்க கூடாது என்று பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாயலூர் பாலாற்று தடுப்பணையின் முகப்பு பகுதியில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்த அறிவிப்பினையும் மீறி, யாராவது குளிக்க செல்கிறார்களா? குளிக்கிறார்களா? என்று போலீசார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

The post இரும்புலிச்சேரி பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்காலிக பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு: 5 கிராம மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: