புயல் காரணமாக கடந்த சில தினங்களாக காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று நீர்வரத்து 5,500 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 21,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்றுமுன்தினம் காலை வினாடிக்கு 5,195 கனஅடி வீதம் வந்துக்கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 7414 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 9246 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 110.93 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 111.39அடியாக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் நீர்மட்டம் 0.46 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை நீர்திறப்பு 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்இருப்பு 80.40 டிஎம்சியாக உள்ளது.
The post காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க குளிக்க தடை appeared first on Dinakaran.