கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி ஜி.எஸ்.மகாலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில், பாதிக்கப்பட்ட கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், சின்ன பகண்டை, கொங்கராயநல்லூர் ஆகிய கரையோர ஊராட்சிகள் மற்றும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளர். வெள்ள பாதிப்புகளை பார்வையிட கடலூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மேல்பட்டாம்பாக்கம் நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அரிசி, மளிகை, பெட்ஷீட், புடவை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
மேலும், கடலூர் – புதுவை சாலையில் சின்னகங்கனாங்குப்பம், பெரியகங்கனாங்குப்பம் பகுதிகளில் தென்பெண்ணை ஆற்று வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டும், புயல் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டும் துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். பெரியகங்கனாங்குப்பத்தில் நடைபெறும் மருத்துவமுகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவர்களிடம், முகாமிற்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறித்தும், எந்தவிதமான மருத்துவ தேவைகள் உள்ளன என்றும் கேட்டறிந்தார்.
கடலூர் மாநகராட்சி மஞ்சக்குப்பம் விக்னேஷ் மகாலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கடலூர் மாநகராட்சியின் திடீர் குப்பம், எம்.ஜி.ஆர் நகர், கே.டி.ஆர் நகர், பெண்ணையாற்று சாலை, தட்சிணாமூர்த்தி நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், போர்வை, புடவை, கைலி உள்ளிட்ட நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், துண்டிக்கப்பட்ட சாலைகள், பழுதடைந்த மின்கம்பங்கள், உயிரிழந்த கால்நடைகள், வீடுகள் உள்பட மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து, பொதுமக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைத்துதுறை அலுவலர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களுடைய பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் சுகாதார பணிகளை மேற்கொள்வதுடன், பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி, மருத்துவ ஆலோசனைகளையும், மருந்து பொருட்களையும் வழங்குமாறும் அறிவுறுத்தினார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எம்எல்ஏக்கள் ஐயப்பன், சபா.ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post கடலூரில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பு: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.