இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி சுமார் 14,449 சதுர கி.மீ. ஆகும். மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு முதலியன இதன் முக்கியத் துணையாறுகளாகும். இந்த சூழலில், பெஞ்சல் புயலால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் வடமாவட்டங்கள் மிதக்கிறது. பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கோரத்தாண்டவம் ஆடியது.
கடந்த 30ம் தேதி புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்து, கடலில் இருந்து நிலபரப்பை அடைந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே இடத்தில் 6 மணி நேரத்துக்கு மேல் நிலை கொண்டது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பேய் மழை பெய்தது. இதில் வரலாற்றில் புதிய உச்சமாக விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் 51 செ.மீ மழை கொட்டி தீர்த்தது.
புதுச்சேரியில் 49 செ.மீ, திண்டிவனத்தில் 37 செ.மீ, கடலூரில் 23 செ.மீ என மழை பதிவானது. இதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.எஸ் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையும், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையும் சாத்தனூர் அணைக்கு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் டிசம்பர் 1ம் தேதி காலை 6 மணிக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நள்ளிரவில் விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியாக கிடுகிடுவென அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும், முழு கொள்ளளவான 119 அடியை நெருங்கியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர் முழுவதையும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அணையின் உதவி செயற்பொறியாளர் சந்தோஷ், தண்டராம்பட்டு தாசில்தார் மோகனராமனுக்கு தகவல் தெரிவித்து, அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அணை நீர் முழுவதும் திறக்கப்படும் என கூறினார். இதையடுத்து விஏஓ மற்றும் உதவியாளர்கள் மூலம் குளமஞ்சனூர், திருவடத்தனூர், புதூர்செக்கடி உள்பட கரையோர கிராமங்களில் தண்டோரா போடப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுபோன்று கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணையாற்றின் கரையோரங்களில் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. அதிகாலையில் 1.68 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் ஆங்காங்கே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வடிகால் பகுதியான கடலூருக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வரை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் கரையோரங்களில் வசித்த 4 மாவட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பான இடங்களில் மக்களை தங்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் மூழ்கியது. கால்நடைகள் உயிரிழந்தன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றங்கரையை ஒட்டிய 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைவெள்ளம் புகுந்து குடியிருப்புகள், விளைநிலங்கள், சாலைகள் சேதமடைந்தது.
கிராமங்களில் உள்ள சாலைகளில் மழைவெள்ளம் வழிந்தோடியதால் சாலைகள் பெயர்ந்து சல்லடை போன்று மாறியது. இதனால் கிராமங்களில் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் 75 கிராமங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 கிராமங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 45 கிராமங்கள் என தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாறு கடலில் கலக்குமிடமான கடலூரிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, நெல்லிக்குப்பம், முல்லிகிராம்பட்டு, கடலூர் குண்டு உப்பலவாடி, பெரியகங்கணாங்குப்பம், தாழங்குடா, ஆல்பேட்டை எம்ஜிஆர் நகர், திடீர்குப்பம் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக தமிழக அரசு மீட்டு, ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உணவு, போர்வை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் தெண்பெண்ணையாற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 68 ஆயிரம், 34 ஆயிரம், 30 ஆயிரம் என படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று மாலை முதல் 22,500 கனஅடியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர கிராமங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
* ‘அரசு நிவாரணம் வழங்கியதால் நிம்மதி’
சாத்தனூர் அணை பாசன சங்கத்தலைவர் ஜெயராமன் கூறுகையில், ‘அணையில் இருந்து தென்பெண்ணையாற்றின் இரு புறங்களில் இருந்தும் 45 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் கிளை ஆறுகள் மூலம் நீர்பாசனம் பெற்று சாகுபடி நடந்து வருகிறது. நவம்பர் மாதத்தில் இருந்து கரையோர மக்களுக்கு தமிழக அரசு, எச்சரிக்கை விடுத்து வந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்ததால் திறக்கப்பட்ட வெள்ளநீரால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்திருப்பது நிம்மதியை தருகிறது’ என்றார்.
* நீர் திறப்பு அதிகரித்தது ஏன்?
நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சாத்தனூர் அணைக்கு கடந்த ஒரு மாதமாக நீர்வரத்து சீராக இருந்து வந்துள்ளது. இதனால் குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி அணை, வாணியாறு அணை, பாம்பாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வரத்து இருந்தது. இந்த நீர்வரத்து அதிகப்படியாக வந்ததால் சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி, படிப்படியாக எச்சரிக்கை விடுத்து 1.68 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது’ என்று கூறினர்.
* முடங்கிய தேசிய நெடுஞ்சாலைகள்
விழுப்புரம் மாவட்டம் அரசூரில், தேசிய நெடுஞ்சாலையை தென்பெண்ணையாற்று வெள்ள நீர் கடந்து சென்றது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சென்னையிருந்து, திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கான சாலைவழிப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக திருப்பி விடப்பட்டது.
தென்பெண்ணையாற்று வெள்ள நீர் தளவானூர், திருப்பாச்சனூர் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் விக்கிரவாண்டி- தஞ்சை சாலைப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. திருவண்ணாமலை – விழுப்புரம், திருக்கோவிலூர் – விழுப்புரம், விழுப்புரம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடலூர், புதுச்சேரி மாநில நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டதால் பஸ்கள், கனரக வாகனங்கள் கடலூர் திருவந்திபுரம் பைபாஸ் வழியாக புதுச்சேரி செல்கிறது.
The post இயற்கை சீற்றத்தால் தண்ணீரில் தத்தளிப்பு: வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட தென்பெண்ணை ஆற்று வெள்ளம்; 255 கிராமங்கள் பாதிப்பு, 400 முகாம்களில் மக்கள் தங்க வைப்பு appeared first on Dinakaran.