தொடர் மழையால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில், தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெசவும், விவசாயமும் இரு கண்கள் போல பிரதான தொழிலாக இருந்து வந்தது. தொழில் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்த நெசவுத்தொழிலில் இன்று சுமார் 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், குருவிமலை, ஐயம்பேட்டை, செவிலிமேடு, முத்தியால்பேட்டை, புஞ்சை அரசன்தாங்கல், அய்யங்கார்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், கைத்தறி நெசவுத்தொழிலை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தொடர் மழையால் நெசவாளர்கள் தொழில் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கைத்தறி எந்திரத்தின் அனைத்து பகுதிகளும் மரத்தால் உள்ளதால் மழைக்காலங்களில் ஈரப்பதமாகி நெசவு செய்ய முடிவதில்லை.

மேலும், தறிக்குழியில் தண்ணீர் தேங்குதல், சாயம் போட்ட பட்டுநூல் வெயிலில் உலரவைக்க முடியாதது, நெய்து முடித்த சேலைகளை உலரவைக்காமல் மடித்து வைக்க முடியாதது போன்ற காரணங்களால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டு நெசவுத்தொழில் முடங்கியுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசத்திடம் கேட்டபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் நெசவுத் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, மழைக்கால நிவாரணமாக மாதம் ரூ.5 ஆயிரம் என மூன்று மாதங்கள் கணக்கிட்டு நிவாரணம் மற்றும் உணவு பொருட்கள் வழங்க மாவட்ட கலெக்டர் மற்றும் கைத்தறி துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது உள்ள நிலையில் மீண்டும் தொழில் செய்ய குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும். எனவே, கைத்தறி நெசவாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post தொடர் மழையால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: