தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர்ந்து நடக்கும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு திட்டவட்டம்

பெரம்பூர்: அரசியலில் தோல்வியடைந்த ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதிபட கூறினார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை திருவிக. நகர் தொகுதி, மண்டலம் 6, வார்டு 71, பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் நெல்வயல் சாலையில் உள்ள கிளை நூலகம், மண்டலம் 6, வார்டு 76 உள்ள பக்தவச்சலம் பூங்கா அருகில் உள்ள கிளை நூலகம், ராயபுரம் தொகுதி, மண்டலம்5, வார்டு53ல் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், துறைமுகம் தொகுதி, மண்டலம்5, வார்டு55, சண்முகம் தெருவில் அமைந்துள்ள கிளை நூலகம், எழும்பூர் தொகுதி, மண்டலம்8, வார்டு 108, ஹாரிங்டன் சாலையில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் உள்ளிட்டவைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது; வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் முதல்கட்டமாக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது தற்போது 6000 கோடி ரூபாய்க்கு மேலாக வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மாநில வளர்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதன்தொடர்ச்சியாக தான் வடசென்னையில் பல்வேறு புதிய திட்டங்களை இன்னும் 2 தினத்தில் முதலமைச்சர் தொடங்கவுள்ளார். கல்விக்கு முக்கியத்துவம் தரும் முதலமைச்சர் வட சென்னையில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிளைநூலகங்களை மேம்படுத்தும் பணியையும் பழுதடைந்த பழைய நூலகங்களை அகற்றி புதிதாக கட்டுவதற்கும் ஆணையிட்டு உள்ளார். அவைகளை ஆய்வு செய்வதற்காக வட சென்னையில் உள்ள கிளை நூலகங்களில் ஆய்வு மேற்கொண்டு அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அண்ணாமலை பேசியது குறித்து கேட்டதற்கு, ‘’அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி. எங்களுக்கு பட்டறிவும் உள்ளது. படிப்பறிவும் உள்ளது. நடுத்தர மக்கள், பாமர மக்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் துணை முதலமைச்சர் அவர்களை போற்றுகிறார்கள். மழை வருவதற்கு முன்பே ஆய்வு செய்தும் மக்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை கொண்டு வருவதும் அடிதட்டு மக்களின் நலனுக்காக உழைத்துக்கொண்டே வருகிறார் நம் துணை முதலமைச்சர். ஒரு அண்ணாமலை அல்ல ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு கூறினார். பேட்டியின்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் சரிதா, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

The post தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர்ந்து நடக்கும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: