விதிகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை? : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

சென்னை : விதிகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை? என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எத்தனை நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அவற்றில் எத்தனை செயல்படுகின்றன? அந்த நிறுவனங்களில் நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்காதவை எத்தனை? ஆண்டறிக்கைகளை சமர்ப்பிக்காதவை எத்தனை? விதிகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை? “ஷெல் கம்பெனிகள்” என்று அழைக்கப்படும் நிழல் நிறுவனங்களாக எத்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? என்றெல்லாம் ஒன்றிய நிறுவன விவகார அமைச்சகத்திடம் நான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு (எண் 66/25.11.2024) இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா அளித்துள்ள பதில் அதிர்ச்சியை தருகிறது.

அமைச்சர் பதில்

நவம்பர் 14, 2024 தேதி அன்று கணக்குப் படி பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 27,75,000. அதில் செயல்படுகிற நிறுவனங்கள் 17,83,418 மட்டுமே. அவற்றில் நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்காத நிறுவனங்கள் 2022 – 23 இல் 5,30,075. ஆண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்காத நிறுவனங்கள் 5,14, 343. விதி மீறல்களுக்காக கம்பெனிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,37, 136 நிறுவனங்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. “ஷெல் கம்பெனிகள்” என்ற வரையறைகள் சட்டத்தில் இல்லாவிட்டாலும் நிதி மடைமாற்றம், மறைத்தல், மோசடி ஆகியவற்றுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

ரெண்டு குளம் பாழு

அமைச்சரின் பதில் குறித்து சு.வெங்கடேசன் கருத்து தெரிவிக்கையில், “35% பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் செயல்படாதவை, செயல்படும் நிறுவனங்களில் 30% நிதி அறிக்கைகளை, ஆண்டறிக்கைகளை சமர்ப்பிக்காதவை என்கிற தகவல்கள் நிறுவன உலகின் செயல்பாடு சீர் கெட்டு இருப்பதன் வெளிப்பாடு ஆகும்.

நிதி அறிக்கைகளை ஆண்டறிக்கைகளை சமர்ப்பிக்காத நிறுவனங்களின் எண்ணிக்கை 2018 – 19 இல் இருந்து தொடர்ந்து அதிகரித்து 2022 – 23 இல் மூன்று மடங்குகள் உயர்ந்துள்ளன.

“ஷெல்” கம்பெனிகள் குறித்த வரையறை சட்டத்தில் இல்லாவிட்டாலும் நிதி மடைமாற்றம், மறைத்தல், மோசடிகள் நடந்தேறி வருகின்றன என்பதை அமைச்சரின் பதில் ஒப்புக்கொள்கிறது. அத்தகைய நிறுவனங்கள் எத்தனை மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி எனது கேள்வி இருந்தாலும் அமைச்சரின் பதிலில் எண்ணிக்கை தரப்படவில்லை. அந்த எண்ணிக்கை இன்னும் அதிர்ச்சியை தருமோ என்னவோ!” என்று கூறியுள்ளார்.

“ரெண்டு குளம் பாழு, ஒன்னு தண்ணியே இல்லை” என்ற கதையாக இருக்கிறது.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post விதிகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை? : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: