பெஞ்சல் புயல், கனமழை காரணமாக 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றம்: மீட்பு பணியில் மாநகராட்சி தீவிரம்

­சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 88.98 மி.மீ. மழை பாதிவாகியுள்ளது. இதையடுத்து மழைநீர் தேங்கிய இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 ராட்சத மோட்டார் பயன்பாட்டில் உள்ளன.

100 எச்பி மோட்டார்கள் 137 மற்றம் 484 டிராக்டர் மேல் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புயல் காரணமாக விழுந்த மரங்களை அகற்றுவதற்காக 9 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், 2 ஹைட்ராலிக் ஏணி, 262 மர அறுவை இயந்திரங்கள், 216 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் என மொத்தம் 489 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதைதொடர்ந்து நேற்று மழையின் காரணமாக விழுந்த 4 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதையில் ரயில்வே மேம்பாலப் பணி காரணமாக தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. மேட்லி சுரங்கப்பாதை மழைநீர்த்தேக்கம் ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீதமுள்ள சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது.
மாநகராட்சி சார்பில் 358 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1,016 நபர்கள் அழைத்து வரப்பட்டு 32 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 216 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. நேற்று முன்தினம் மொத்தம் 6,35,300 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நேற்று காலை உணவு 2,75,000 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் சென்னையில் உள்ள 386 அம்மா உணவகங்களிலும் நேற்று முன்தினம் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இவற்றின் மூலம் 1,07,047 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார்நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தினை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னையில் 2,631 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,39,484 நபர்கள் பயனடைந்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து மழைத் தொடர்பாக 1913 என்ற உதவி எண்ணிற்கு 50,887 புகார்கள் பெறப்பட்டு, 39,768 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 11,119 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை குடிநீர் வாரியம் மூலம் 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்கள், 225 ஜெட்ராடிங் வாகனங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 45 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 642 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

The post பெஞ்சல் புயல், கனமழை காரணமாக 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றம்: மீட்பு பணியில் மாநகராட்சி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: