திராவிட மாடல் அரசின் மீது நாள்தோறும் அவதூறுகளை அள்ளி வீசும் எடப்பாடி: அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு கூட்டணி கிடைக்காமல் அல்லாடும் பழனிச்சாமி, அதிமுகவில் நடக்கும் மோதல்களை கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறும் பழனிச்சாமி இல்லாததையும் பொல்லாததையும் உளறிக்கொண்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையம், அழகுமலைக்கு அருகே உள்ள சேமலைக்கவுண்டன் பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உடனடியாக ஏழு சிறப்பு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத எடப்பாடி பழனிச்சாமி தனிநபர் குற்றங்களையும் ஆதாய கொலைகளையும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டிருக்கிறார். மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தவிருந்த மக்களைச் சந்தித்து மக்கள் எடுக்கும் முடிவுக்கு 100% தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என முதல்வர் அறிவித்த பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வழக்கமாக டிவி பார்த்து செய்தி தெரிந்து கொள்ளும் எதிர்கட்சித்தலைவர் நேற்று டிவியையும் பார்க்காமல் அதிமுக சார்பில் போராட்டங்களில் கலந்து கொள்வோம் என அறிவித்துள்ளார். உட்கட்சி மோதல்கள், கூட்டணிக்கு கட்சிகளை ஈர்க்க முடியாத இயலாமையை மறைப்பதற்காக திராவிட மாடல் அரசை தினந்தோறும் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் எடப்பாடி பேச்சை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திராவிட மாடல் அரசின் மீது நாள்தோறும் அவதூறுகளை அள்ளி வீசும் எடப்பாடி: அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: