இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவருமான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு மேற்கு மண்டல ஐஜி தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அப்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. புதிய மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற முரளிதரன் முன் வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன், ‘கொலை, கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை அனுமதி வழங்கப்படாமல் உள்ளது’ என்று தெரிவித்தார். அப்போது, குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பினர் சம்பவம் நடைபெற்ற கொடநாடு பகுதியில் ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என அரசு தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் காரசார விவாதம் நடந்தது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி முரளிதரன், வழக்கு விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
* எடப்பாடியிடம் விசாரணை?
அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக நிர்வாகி சஜீவனிடம் நேற்று (நேற்று முன்தினம்) விசாரணை நடத்தப்பட்டது. புலன் விசாரணையின் போது ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டியது விசாரணை அதிகாரியின் கடமை. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமியை எதிரி தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேட்டு கொண்டுள்ளனர். ஆனால், தற்போது வழக்கு புலன் விசாரணை கட்டத்தில் இருப்பதால் யார்? யாரை விசாரிக்க வேண்டும் என்பதை விசாரணை அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள்.
தற்போது சிபிசிஐடி போலீசாரின் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் வழக்கில் தொடர்புடையவர்கள், தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், அரசு தரப்பு சாட்சியாக இருந்தாலும் அல்லது எதிரி தரப்பு சாட்சியாக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள். வழக்கு விசாரணைக்கு சர்வதேச போலீசாரின் விசாரணை அறிக்கை மற்றும் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முடிவுகளும் இன்னும் வராமல் உள்ளது. விசாரணையின் போது கிடைக்கும் தகவலின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமில்லை வேறு யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post கொலை, கொள்ளை வழக்கு கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கேட்டு காரசார விவாதம்: டிச.20ம் தேதிக்கு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.