விடுதலை செய்ய வலியுறுத்தி பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் வாபஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். இவர் மீது ஊழல் உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசுகள் அனைத்தும் அரசு கருவூலத்துக்கு சென்று விடும். அவ்வாறு வழங்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றை, இம்ரான் கான், பிரதமராக இருந்தபோது அரசு கருவூலத்துக்கு குறைந்த பணம் செலுத்தி முறைகேடான வழியில் எடுத்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு கடந்த 20ம் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. அதற்கு பிறகும் அடுத்தடுத்து அவர் மீது வழக்குகள் பாய்ந்தது. இதனால், இம்ரான் கானால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பரவுவதை தடுக்க இணையதளம் மற்றும் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டன.

போராட்டத்தை ஒடுக்க போலீசார், ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளவும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இஸ்லாமாபாத்தில் வன்முறை நிலவியது. இதில் 6 போலீசார் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு வரை நீடித்த இந்த வன்முறையில் மேலும் 4 போலீசார் உயிரிழந்தனர். இந்நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இம்ரான்கான் ஆதரவாளர்கள் அறிவித்தனர். இதனால் தலைநகர் இஸ்லாமாபாத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

The post விடுதலை செய்ய வலியுறுத்தி பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Related Stories: