சங்கீதம் முதலிய அனைத்து கலைகளுக்கும் இவளே தலைவி ஆவாள். அம்பிகையை வழிபடும் வழிகளில், அவளை பத்து விதமான வடிவங்களில் வழிபடுவது மிகவும் சிறந்தது. இவற்றிற்கு “தச மகா வித்யா தேவிகள்’’ என்று பெயர். இந்த தச மகா வித்யா தேவிகளுக்குள் மாதங்கி தேவியும் ஒன்று. விரும்பித்தொழும் அடியார்க்கு, சங்கீத ஞானம் முதலிய, அனைத்து கலை ஞானத்தையும் தங்கு தடையின்றி அருள்பவள், இந்த தேவி.
மந்திர சாஸ்திர நூல்களின் படி, இந்த ராஜசியாமளா தேவிக்கு பல விதமான ரூபங்கள் உண்டு. இவற்றிற்கு ரூப பேதங்கள் என்று பெயர். ஒவ்வொரு, சியாமளா தேவியின் உருவத்துக்கும் மந்திரம் மாறுபடும். இதை மந்திர பேதம் என்று சொல்வார்கள். இப்படி இருக்கும், சியாமளா தேவியின் பல மந்திர மற்றும் ரூப பேதங்களில் மிகவும், ஆச்சரியமானதும், அதீத சக்தி கொண்டதுமான, சியாமளா தேவியின் மந்திரம்தான் வேணு சியாமளா மந்திரம்.
மந்திர சாஸ்திரங்களின் படி, ஒவ்வொரு மந்திரத்திற்கும், அந்த மந்திரத்துடைய தேவதை இருக்கும். இந்த மந்திரத்தை ஜெபிக்க ஜெபிக்க, அந்த தேவதையின் அருள் கிடைக்கும். ஆனால் வாஸ்தவத்தில், மந்திரத்திற்கும், மந்திரத்திற்கு உரிய தேவதைக்கும் வித்தியாசமில்லை. மந்திரமே அந்த தேவதை, தேவதையே அந்த மந்திரம். சுருங்க சொல்ல வேண்டும் என்றால், அந்த தேவதையின் ஒலி வடிவமே மந்திரம் என்று சொல்லலாம். அப்படி பார்க்கும் போது, வேணு சியாமளா மந்திரத்திற்கு உரிய தேவதை “புல்லாங்குழல்’’ என்ற வாத்தியம்தான். ஆம்! வாத்தியம்தான் இங்கே தேவதை. ஆனால், இதில் ஒரு சூட்சுமம் நிறைந்திருக்கிறது. இங்கே புல்லாங்குழல் வடிவில் இருப்பது சாட்சாத் சியாமளா தேவியே என்பதை உணர்த்து கொள்ள வேண்டும். சியாமளா தேவிக்கு “சங்கீத யோகினி’’ என்று பெயர்.
“சங்கீத சியாமளா’’ என்றும் அழைப்பார்கள். சங்கீதத்துக்கு அதிஷ்டான தேவதை அல்லது அதிதேவதை சியாமளா தேவிதான். ஆகவே, சங்கீதத்தில் மிகவும் இனிமையான ஒலி எழுப்பக்கூடிய புல்லாங்குழலே, சியாமளா தேவியின் வடிவமாக, முனிவர்களால் காணப்படுகிறது. இதற்கு பின் ஒரு பெரிய ரகசியமே அடங்கி இருக்கிறது. அவற்றை முடிந்த வரையில் அனுபவிப்போம் வாருங்கள்.
புல்லாங்குழலும் மொழியும்
புல்லாங்குழலுக்குள் காற்று செல்லும் போது, அது வித விதமான சத்தங்களைஏற்படுத்துகிறது. ஒவ்வொரு துளையில் காற்று செல்லும் போதும், ஒவ்வொரு விதமான ஸ்வரங்கள் வருகிறது. அதேபோல, தேகத்தில் பிராண வாயு மூலாதாரத்தில்தான் தோன்றுகிறது. பேச வேண்டும் என்ற ஆசை தோன்றும் போது, அந்த முயற்சியால் தூண்டப்பட்டு எங்கும் நிறைந்த சப்த பிரம்மமாக மாறுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இப்படி சப்த பிரம்மம் தோன்றி னாலும், அது தோன்றிய மூலாதாரத்திலேயே அசைவற்று நிற்கிறது. இதற்கு “பர வாக்’’ என்று பெயர். இதன் பிறகு, இந்த சப்த பிரம்மம், வாயுவினால் தூண்டப்பட்டு நாபிக்கு அருகில் வருகிறது. இங்கே ஆராய்ந்து பார்க்கும் தன்மையுடன் கூடிய மனதுடன் கலக்கிறது.
அப்போது அதற்கு லேசாக அசையக்கூடிய தன்மை ஏற்படுகிறது. இதற்கு “பஷ்யந்தி’’ என்று பெயர். அங்கிருந்து மீண்டும் வாயுவினால் தூண்டப்பட்டு, பஷ்யந்தி வாக் இதய ஸ்தானத்திற்கு வருகிறது. அங்கே, தீர்மானம் செய்யக்கூடிய சக்தி உடைய புத்தியோடு கலக்கிறது. அதனால் அதிகமான அசைவு ஏற்படுகிறது. சப்த பிரம்மத்தின் இந்த நிலைக்கு “மத்யமா வாக்’’ என்று பெயர். பிறகு, அங்கிருந்த சப்த பிரம்மம், முன்போல் வாயுவினால் தூண்டப்பட்டு, வாயின் வழியே வெளி வருகிறது. அது “அ’’ முதலிய எழுத்துக்களின் உருவத்தொடும், காதால் கேட்கப் படும் தன்மையோடும் இருக்கிறது. இதை “வைகரீ வாக்’’ என்று சொல்கிறோம்.
“பரா வாக்’’, “பஷ்யந்தி வாக்’’, “மத்யமா வாக்’’ இவை மூன்றும் சூட்சுமமானவை, ஒலி வடிவ இறைவனின் மிகவும் சூட்சுமமான நிலைகள் இவை. ஆகவே, இவைகளை மனிதனால் உணர முடியாது. அதே ஒலி வடிவ இறைவன், வைகரீ வாக்காக வெளிப்படும் போது, அனைவராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. உணர முடிகிறது.எப்படி பிராண வாயுவானது, மூலாதாரம் முதலிய, உடலில் இருக்கும் ஆதார சக்கரங்கள் வழியே செல்லும் போது, கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகள் தோன்றுகிறதோ, அதே போல புல்லாங்குழலுக்குள் காற்று செல்லும் போது இன்னிசையாக வெளிப்படுகிறது.
மேலே நாம் கண்ட, ஒலியின் தோற்றத்தின் வடிவிலும், அதன் நிலைகளின் வடிவிலும் அம்பிகையே இருக்கிறாள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. (லலிதா சஹஸ்ரநாமம் நாமா: 366 முதல்). மனிதன் பேசும் மொழிகளின் வடிவிலும் அம்பிகையே இருக்கிறாள் என்கிறது சாஸ்திரம். அந்த மொழி இருப்பதால்தான் மனிதனால் பேச முடிகிறது, அந்த மொழியால்தான் வேதங்கள் இருக்கிறது. ஆகவே, அந்த மொழியின் வடிவிலும் அம்பிகையே இருக்கிறாள் (பாஷா ரூபா என்ற நாமம்) இப்படி, பரம்பொருளின் ஒலி வடிவம் தோன்றுவதை, சூட்சுமமான முறையில் நமக்கு காட்டுவதால், புல்லாங் குழல் பரம்பொருளின் வடிவமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆகவே, புல்லாங்குழலும் அம்பிகையின் வடிவமே.
புல்லாங்குழலும் குண்டலினி யோகமும்
நமது முதுகு தண்டின் அடிப்பகுதியில், மூலாதாரத்தில், குண்டலினி என்ற சக்தி, பாம்பின் வடிவில் சுருண்டுபடுத்து இருக்கிறது. ஒரு தேர்ந்த யோகி, வாசி யோகம் முதலிய மூச்சுப் பயிற்சியால், மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை எழுப்புகிறார். அந்த குண்டலினி சக்தி, நமது முதுகு தண்டில் இருக்கும் சுஷும்னா நாடியின் வழியே, அந்த யோகியின் வாசி யோக பயிற்சியினால் மேலே செல்கிறது.
அவரது மூச்சு பயிற்சியால், ஸ்வதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விஷுக்தி, ஆக்ஞா என்ற முதுகு தண்டில் இருக்கும் சூட்சும யோக சக்கரங்களின் வழியே பயணித்து இறுதியில், உச்சியில் இருக்கும் சஹஸ்ரார சக்கரத்தில் இறைவனோடு இரண்டறக் கலக்கிறது. உற்று கவனித்தால், சுஷும்னா நாடி என்ற குழாய் வழியே, ஒரு தேர்ந்த யோகி, வாசி யோகத்தால் பிராண வாயுவை செலுத்தும் போது, குண்டலினி சக்தி எழுந்து, ஒவ்வொரு சக்ரங்களாக கடந்து, சஹஸ்ரார சக்கரத்தை அடைந்து, இறைவனோடு கலந்து, ஆனந்தம் என்ற அமுதத்தை அனுபவிக்கிறது.
அதே போல, புல்லாங்குழல் என்ற குழாய் வழியே ஒரு தேர்ந்த இசை கலைஞர் தனது மூச்சுக்காற்றை நிரப்பி வாசிக்கும் போது, இசை என்ற அமுதம் கிடைக்கிறது. ஆகவே, குண்டலினி யோகத்தின் ஒரு குறியீடாக புல்லாங்குழல் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. ஆகவே, குண்டலினி யோகத்தின் தலைவியாக இருக்கும் அம்பிகையின் வடிவம் புல்லாங்குழல் என்று சொல்லப்படுகிறது.
புல்லாங்குழலும் உடலும்
புல்லாங்குழலில் ஒன்பது துளைகள் இருக்கிறது. மனிதனின் உடலிலும் ஒன்பது துளைகள் இருக்கிறது. புல்லாங்குழலுக்கு உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் காற்று என்று வரும் போது இனிய நாதம் ஏற்படும். அதே போல, மனிதனின் உடலும் வெறும் காற்றடைத்த பை என்பது சித்தர்கள் வாக்கு. “காயமே இது பொய்யடா! வெரும் காற்றடைத்த பை அடா’’ என்ற சித்தர் வாக்கு உலக பிரசித்தம். பொய்யான இந்த உடலில், பிராணன் என்ற வாயு இருக்கும் வரைதான் மனிதன் உயிரோடு இருக்கிறான். அந்த காற்று நீங்கிவிட்டால், இது வெரும் பிணம்தான். எப்படி புல்லாங்குழலில் காற்று சென்று வரும் போது மட்டும் இனிய நாதம் பிறக்கிறதோ, நவத்வாரம் வழியே காற்று சென்று வரும் வரையில்தான் உயிர் இருக்கிறது.
இப்படி மனித உடலின் குறியீடாகவும் புல்லாங்குழல் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. `உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று சொல்வது போல, இந்த உடல் இறைவன் தங்கும் ஆலயம். அதே போல, மனிதனின் உடலை உருவகப் படுத்தும் புல்லாங்குழல் ஒரு தெய்வீக அம்சம் பொருந்தியது என்பது மிகையல்ல.
புல்லாங்குழல் நமக்கு காட்டும் தத்துவம்
புல்லாங்குழலின் உள்ளே ஒன்றும் இருக்காது. அந்த வெற்றிடம்தான் காற்று புகும் போது நாதத்தை ஏற்படுத்துகிறது. அதே போல, மனித மனத்தின் உள்ளே, அறியாமையும், ஆணவமும் இல்லாமல், வெற்றிடமாக இருந்தால், இறைவன் உள்ளே வெகு சீக்கிரம் நுழைந்து விடுவான். அதே போல புல்லாங்குழல் நீண்டு, வளைவின்றி இருக்கிறது. அதே போல மனிதன் என்று தனது சுயத்தை விட்டுக் கொடுக்காமல், வளைந்து கொடுக்காமல் இருக்க வேண்டும். முக்கியமாக சாதனையில் ஒரு சிறு குறையும் இல்லாமல் நேராக இருக்கவேண்டும் என்று காட்டுகிறது.
கண்ணனும் புல்லாங்குழலும்
கண்ணன் புல்லாங்குழல் ஊதிய போது, அசையும் பொருள் அசையாப் பொருள் என அனைத்தும் அந்த சங்கீதத்தில் மயங்கி நின்று விட்டது என்று நாம் படிக்கிறோம். கேட்கிறோம். பலருக்கு இது ஒரு புரியாத புதிர்தான். பரம புருஷன், உலகையே ஆட்டி வைக்கும் லீலா நாடக சூத்ர தாரியான கண்ணன், குழல் ஊதினால், அனைவரும் மெய் மறந்து நிற்பது நியாயம்தான். இருப்பினும் கண்ணன், தன்னுடைய எந்த சக்தியை பயன்படுத்தி இந்த செயற்கரிய செயலை செய்தார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இன்று வரை இருந்து வருகிறது. இதற்கு காளிதாசர், தன்னுடைய முதல் நூலான சியாமளா தண்டகத்தில் விடையை சொல்கிறார். இந்த சியாமளா தண்டகத்திற்கு “சியாமளா உபநிஷத்’’ என்றே பெயர். காரணம் இல்லாமல் இல்லை.
இதில் அம்பிகை சியாமளா தேவியின் ரூப வர்ணனை, அவளது மந்திர சாஸ்திர ரகசியங்கள், பூஜித்து பயன் பெற்றவர்கள் பட்டியல், சியாமளா தேவியின் பரிவார தேவதைகளின் பட்டியல், சியாமளா தேவியின் ரூப பேதங்கள், சியாமளா தேவியை உபாசிக்கும் முறை, சியாமளா தேவியை தியானிக்க வேண்டிய முறை, சியாமளா தேவியை பூஜிப்பதால் சாதகன் பெரும் பலன்கள், என இதில் மகாகவி காளி தாசர் சொல்லாத ரகசியங்களே இல்லை. இவை அனைத்தையும் ஒரு தேர்ந்த குருவிடம் சென்று கேட்டு தெரிந்து கொள்வதுதான் சிறந்தது என்பதால் இங்கே தரவில்லை. இப்படி பல ரகசியங்கள் நிறைந்த சியாமளா தண்டகத்தில் காளி தாசர் பின்வருமாறு சொல்கிறார்.
“கீத வித்யா வினோதாதி த்ருஷ்னேன கிருஷ்ணேன சம் பூஜ்யசே’’ என்று சொல்கிறார். அதாவது, “சியாமளா தேவியான உன்னை பூஜித்ததால், கீத வித்யாவை அடைந்து, உலகையே தனது கீதத்தால் கட்டிப்போட்ட கிருஷ்ணனை தாசனாக உடையவளே’’ என்று பொருள். முதலில் நாம் பார்த்தது போல, புல்லாங்குழல் வடிவில் இருக்கும் சியாமளா தேவியை பூஜித்து அவளது திருவருளால், கிருஷ்ணர் உலகையே தனது புல்லாங்குழல் இசையால் கட்டிப் போட்டு இருக்கிறார் என்று பொருள்.
இதில் இன்னொரு சூட்சுமமும் அடங்கி யிருக்கிறது. காளி தாசர் கீத வித்யா என்றுதான் சொன்னாரே ஒழிய, சங்கீத வித்யா என்று சொல்லவில்லை. ஆகவே, இங்கு கீத வித்யா என்ற சொல் இரண்டு பொருளில் வருகிறது. ஒன்று கண்ணனின் புல்லாங்குழல் இசையை குறிக்கிறது. மற்றொன்று, யுத்த களத்தின் மத்தியில் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்த கீதை அதாவது பகவத் கீதையையும் குறிக்கிறது.
அதாவது பகவத் கீதையில் கண்ணன் கூறிய அனைத்து விதமான ஞானத்தையும், கண்ணன் சியாமளா தேவியை பூஜித்தே அடைந்தான் என்பது, காளிதாசர் முதலான சாக்தர்களின் (தேவி உபாசகர்களின்) முடிவான முடிவு. இதிலிருந்து, வேணு மாதங்கி தேவி சங்கீத ஞானம் மட்டுமில்லை சாஸ்திர ஞானம் மட்டுமில்லை, அனைத்து விதமான ஞானத்தையும் தனது பக்தனுக்கு
அருளுகிறார் என்று தெரிகிறது.
வேணு மாதங்கி மந்திரம்
உலகையே மயக்கிய இசை ஞானத்தையும், உலகிற்கே வழி காட்டும் பகவத்கீதை என்ற ஞானத்தையும் கண்ணன், வேணு மாதங்கி உபாசனை செய்தே அல்லது அவளது மந்திரத்தை ஜெபித்தே அடைந்தார் என்று சாஸ்திர நூல்கள் சொல்கிறது. இப்படி பல மகிமைகளை உடைய வேணு மாதங்கி மந்திரத்தை பற்றி பார்ப்போம் வாருங்கள். வேணு மாதங்கி மந்திரத்திற்கு ரிஷி மதங்கர். மாதங்கி அம்பிகையை, தனது மகளாக பெற்ற மதங்க மகரிஷிதான், மாதங்கி தேவியின் மந்திரத்தையும் உலகிற்கு வழங்கி இருக்கிறார்.
மந்திரத்திற்கு உரிய சந்தஸ், ஆனுஷ்டுப் சந்தஸ். வேணு மாதங்கி தேவதை. இந்த மந்திரத்தை ஜபிப்பதால் சகல விதமான ஞானமும் அடையலாம். ஆனாலும் குறிப்பாக, சாஹித்ய வித்யாவை அள்ளி வழங்கும் அற்புத மந்திரம் இது. தேர்ந்த குருவிடம் இருந்து இதை உபதேசம் பெற்று, ஜெபித்து வர நல்ல பலன்களை இந்த மந்திரம் அருளும். ராஜ மாதங்கி தேவியை நினைத்து, மனமுருக சியாமளா தண்டகத்தை கேட்டாலோ அல்லது சொன்னாலோ அல்லது நினைத்தாலோகூட, மந்திர ஜப பலனை அடைந்து தேவியின் இன்னருளை பெற்று இன்புற்று வாழலாம்.
ஜி.மகேஷ்
The post கண்ணனின் புல்லாங்குழல் ரகசியம்! appeared first on Dinakaran.