அந்தமான் அருகே ரூ36 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல்: மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைது


போர்ட் பிளேர்: அந்தமான் பாரேன் தீவு அருகே மியான்மரைச் சேர்ந்த 6 மீனவர்களிடம் இருந்து சுமார் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்புள்ள 6,000 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அந்தமான் மற்றும் நிக்கோபார் கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமை ரோந்து வந்தனர். அப்போது ​​போர்ட் பிளேரில் இருந்து கிட்டத்தட்ட 150 கி.மீ தொலைவில் உள்ள பாரேன் தீவு அருகில் இழுவை படகில் வந்த மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களிடமும், அவர்கள் வந்த படகிலும் சோதனை நடத்தினர். அப்போது 6,000 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதைப்பொருள் சர்வதேச மதிப்பில் 1 கிலோ ரூ.6 கோடி ஆகும். மொத்தம் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

போர்ட்பிளேருக்கு இந்த படகை ஞாயிற்றுக்கிழமை இழுத்து வந்தனர். மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். பிடிபட்ட 6 மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களை உள்ளூர் போலீசில் கடலோர காவல்படையினர் ஒப்படைத்தனர். 6,000 கிலோ தடைசெய்யப்பட்ட மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் தாய்லாந்திற்கு கொண்டு செல்லும் போது கைப்பற்றப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதை கண்டுபிடிக்க மியான்மரில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்த படகில் கைப்பற்றப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசியின் அழைப்பு பதிவைப் பெற போலீசார் முயற்சித்து வருகிறார்கள். கைதான 6 பேரும் எந்தவித தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதனால் செயற்கைக்கோள் தொலைபேசி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சீனாவை சேர்ந்த எல் சாப்போ போதைக்கும்பலுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், அந்தமானில் இருந்து இதே போன்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பில் போதைப்பொருள் பிடிபட்டு இருப்பது இதுவே முதல்முறை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ​​தாய்லாந்தில் இதுபோன்ற போதைப்பொருட்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. எனவே சீனாவை சேர்ந்த எல் மென்சோ அல்லது எல் சாப்போ கும்பல்கள் இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ைகது செய்யப்பட்ட 6 பேரும் அந்தமான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

* அந்தமானின் பாரன் தீவு அருகில் மியான் படகு ஒன்றை இந்திய கடலோர காவல்படையினர் மடக்கினர்.
* சோதனையிட்டதில் ரூ. 36 ஆயிரம் கோடி மதிப்புள்ள 6 ஆயிரம் கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது.
* கடத்தலில் சீனாவை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

The post அந்தமான் அருகே ரூ36 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல்: மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: