திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு இயக்கப்பட்ட சர்வீஸ் பஸ்கள் திடீர் நிறுத்தம்: மீண்டும் இயக்க கோரிக்கை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு இயக்கப்பட்ட சர்வீஸ் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இச்சேவையை மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். முருகப்பெருமானின் அறுவடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கடற்கரையோரம் அமைந்துள்ளதால் சிறந்த ஆன்மீகத் தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் காணப்படும். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளும் குவிவர்.

கோயிலுக்கு கார், வேன்களில் வரும் பக்தர்கள் நேரடியாக கோயில் வாசல் நாழிக்கிணறு பேருந்து நிலையம் வரை வந்து செல்கின்றனர். கோயில் வாசல் வரை வரும் அரசு பஸ்களில் ஏறினால், நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில் பக்தர்கள் இறக்கி விடப்படுவர். கோயில் வாசல் செல்லாத பஸ்கள், நாகர்கோவில், கன்னியாகுமரி மார்க்கமாக வரும் பஸ்களில் வருவோர் உள்ளிட்டோர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது கோயில் வாசல் செல்லும் பஸ்களில் ஏறி கோயிலுக்கு செல்வது வழக்கம். ரயிலில் வரும் பக்தர்களும் ஆட்டோ அல்லது பஸ்சில்தான் கோயிலுக்கு செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் கட்டணம் ரூ.20 என்றால், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து கோயில் வாசலுக்கு செல்ல ஆட்டோ கட்டணம் அதிகமாக இருக்கும். இதனால் பக்தர்கள் பணச்சுமையை எண்ணி நடந்தே கோயிலுக்கு செல்வது வழக்கம். எனவே கோயில் வாசலுக்கு என தனியாக சர்வீஸ் பஸ் இயக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த நவ.2ம் தேதி முதல் நவ.13ம் தேதி வரை கந்தசஷ்டியை முன்னிட்டு அரசு பஸ்கள் அனைத்தும் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக கோயில் வாசலுக்கு 3 சர்வீஸ் பஸ்கள் இயக்கப்பட்டன. திருவிழா முடிந்தும் இந்த சர்வீஸ் பஸ்கள், கடந்த 18ம் தேதி வரை தொடர்ந்து இயங்கியது.

சர்வீஸ் பஸ்களில் பெண்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணித்தனர். ஆண்களுக்கு மட்டும் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் – நாழிக்கிணறு பேருந்து நிலையம் இடையே இந்த சர்வீஸ் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இது பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் 19ம் தேதி முதல் சர்வீஸ் பஸ்கள் இயக்கப்படாததால் ரயில் நிலையம் அல்லது பகத்சிங் பேருந்து நிலையத்தில் இறங்கும் பக்தர்கள், கோயிலுக்கு செல்வதற்கு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட சர்வீஸ் பஸ் சேவையை மீண்டும் வழக்கம்போல் இயக்குவதற்கு திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு இயக்கப்பட்ட சர்வீஸ் பஸ்கள் திடீர் நிறுத்தம்: மீண்டும் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: