புதிய ரயில்வே மேம்பால பணிகள் மீண்டும் தொடக்கம்: ராட்சத கிரேன் மூலம் கர்டர்கள் இணைப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் ஒழுகினசேரியில் புதிய ரயில்வே மேம்பாலத்துக்கான கர்டர்கள் இணைப்பு பணி நேற்று தொடங்கியது. நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையிலான ரயில்வே தண்டவாளம் செல்கிறது. தற்போது இந்த பகுதியில் இரட்டை ரயில் பாதைக்காக கூடுதல் தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஏற்கனவே இருந்த ரயில்வே மேம்பாலத்தின் அருகில் புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தன.

கடந்த ஜனவரி மாதமே பழைய ரயில்வே மேம்பாலத்தை இடிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டி செயல்பாட்டுக்கு வராமல் பழைய ரயில்வே மேம்பாலத்தை இடிக்க கூடாது என்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கோரிக்கை விடுத்தார் . இதையடுத்து பழைய ரயில்வே மேம்பாலத்தை இடிக்காமல் தற்காலிகமாக போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் பழைய ரயில்வே மேம்பாலம் வலுப்படுத்தப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. அதன் பின்னர் புதிய ரயில்வே மேம்பாலத்துக்கான பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டு இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன், பாலத்தின் நடு பகுதியில் பொருத்துவதற்கான கர்டர்கள் ெகாண்டு வரப்பட்டன. ஒழுகினசேரி ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் தற்போது கர்டர்களை இணைக்கும் பணி தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக பாலத்தின் நடு பகுதியில் இருபுறமும் அமைக்கப்படும் அலங்கார வளைவுக்கான கர்டர்களை மிகப்பெரிய கிரேன் மூலம் பொருத்தும் பணி நேற்று காலை தொடங்கியது.இதற்காக இரண்டு மிகப்பெரிய கிரேன்கள் கொண்டு வரப்பட்டு கர்டர்கள் இணைக்கப்பட்டன. பின்னர் அவற்றை மேம்பாலத்தின் நடுப்பகுதியில் வைப்பதற்கான பணிகள் தொடங்கின.

இரு புறமும் சென்னை நேப்பியர் பால வளைவு போல் அமையும் வகையில் இந்த அலங்கார வளைவு வைக்கப்பட உள்ளது. இரு அலங்கார வளைவும் தலா 47 டன் எடை கொண்டதாகும். அலங்கார வளைவுகள் வைக்கப்பட்ட பின்னர் நடுப்பகுதியில் கர்டர்கள் பொருத்தி காங்கிரீட் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2025ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

The post புதிய ரயில்வே மேம்பால பணிகள் மீண்டும் தொடக்கம்: ராட்சத கிரேன் மூலம் கர்டர்கள் இணைப்பு appeared first on Dinakaran.

Related Stories: