சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து முயற்சி செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், குறிப்பாக சாலைகளை அகலப்படுத்துவது புதிய இணைப்பு சாலைகளை உருவாக்குவது, புதிய மேம்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொணடு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சென்னை மாநகராட்சி சாலைகள் மற்றும் மேம்பாலங்களை மேம்படுத்துவது குறித்து அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், சென்னையில் உள்ள மிக முக்கிய சாலைகளை விரிவுபடுத்த திட்ட அறிக்கை தயார் செய்யவும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, நெரிசல் மிகுந்த சாலைகள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
* காமராஜர் சாலையில் இருந்து வாலாஜா சாலை போக்குவரத்து சந்திப்பு முதல் கலங்கரை விளக்கம் வரை (3 கி.மீ).
* புதிய ஆவடி சாலையில் எம்.டி.எச்., சாலையில் இருந்து பெரியார் சாலை வரை (2 கி.மீ).
* சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் முதல் அண்ணா சாலை சந்திப்பு வரை (2 கி.மீ).
* காந்தி மண்டபம் சாலையில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை (200 மீ).
* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், சென்னை சிட்டி சென்டர் முதல் காமராஜர் சாலை வரை (800 மீ).
* கிரீன்வேஸ் சாலையில், போர்சோர் எஸ்டேட் முதல் திரு.வி.க., பாலம் வரை உள்ள பேருந்து வழித்தட சாலைகளை விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் திட்ட அறிக்கைக்கு பிறகு சாலைகளை விரிவு செய்ய நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேற்குறிப்பிட்டபடி இந்த முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகன ஓட்டிகளின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post சென்னையில் நெரிசல் மிகுந்த 6 சாலைகளை அகலப்படுத்த முடிவு : சாத்தியக்கூறுகள் ஆய்வு appeared first on Dinakaran.