துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பால பணிக்கு ஏற்கனவே உள்ள 115 தூண்களை மீண்டும் பயன்படுத்த திட்டம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பால பணிக்காக ஏற்கனவே உள்ள 115 தூண்களை பயன்படுத்தப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை துறைமுகத்திலிருந்து கன்டெய்னர் சரக்கு லாரிகள் போக்குவரத்து தடையின்றி வந்து, செல்வதற்காக, கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலை திட்டமாக கருதப்பட்ட இந்த திட்டத்தை, 2009ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் தலைமையில், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சுமார் ரூ.1,815 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த திட்டம் 20 கி.மீ தொலைவுக்கு கூவம் ஆற்றின் வழியே அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகளும் முடுக்கிவிடப்பட்டன.

மதுரவாயல், சேத்துப்பட்டு பகுதிகளிலும், கூவம் நதியிலும் உயர்மட்ட சாலைக்கான தூண்கள் முழுவீச்சில் கட்டப்பட்டு வந்தன. பறக்கும் சாலை திட்டத்தின் 15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், 2011ம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அதிமுக தலைமையில் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, “கூவம் நதியில் அமைக்கப்படும் பறக்கும் சாலை திட்டத்தால் நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், எனக் கூறி பறக்கும் சாலைத் திட்டத்துக்குத் தடை ஏற்படுத்தினார்.

மேலும், மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருந்த அனுமதியையும் எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் மேம்பால சாலைத் திட்டம் ரூ.5,800 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தில், சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய தூண்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரவாயல் பகுதிகளில் உள்ள 125 தூண்களில் 115 தூண்களை கட்டுமானத்திற்காக மீண்டும் பயன்படுத்துவதற்காக தூண்களின் வலிமையை கண்டறிவதற்கான சோதனைகள் நடந்து வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 21 கிலோ மீட்டர் நீளமுள்ள ஈரடுக்கு மேம்பாலத்திற்கு தற்போதைய 125 தூண்களில் 115 தூண்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் 115 தூண்களின் வலிமையை கண்டறிவதற்கான சோதனை நடந்து வருகிறது. இந்த தூண்கள் புதிதாக அமைய உள்ள வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூண்களிலிருந்தும் தூணின் மையப்பகுதி மற்றும் கம்பிகளின் மாதிரிகள் எடுக்கப்படுகிறது. அல்ட்ரா சோனிக் உள்ளிட்ட கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது. ஏனென்றால் புதிய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு இந்த தூண்களை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த சோதனையானது குறைந்தது 2 வாரங்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

இதனிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக கூவம் ஆற்றின் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தடையின்றி செல்வதை உறுதிசெய்ய கட்டுமானத்திற்கு தேவையான தற்காலிக கட்டமைப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இருப்பினும் துறைமுக வளாகத்தில் 700 மீட்டர் தூரத்திற்கு விரைவுசாலை வரும் இடத்தில் பிரதான பாதை மற்றும் இரண்டு சாய்வு பாதைகளை அமைக்கும் பணியிலும் ஒப்பந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் மதுரவாயல் அருகே 640 மீட்டர் தூரத்திற்கு தூண் கட்டுமானத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.3570 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பால பணிக்கு ஏற்கனவே உள்ள 115 தூண்களை மீண்டும் பயன்படுத்த திட்டம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: