ஊரப்பாக்கம் அருகே விவசாய நிலத்தில் புகுந்த முதலையால் பரபரப்பு: வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்பட்டது

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே ஏரியிலிருந்து தப்பித்து விவசாய நிலத்திற்குள் புகுந்த 7 அடி முதலையை வனத்துறையினர் மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கீரப்பாக்கம், முருகமங்கலம், பெரிய அருங்கால், மற்றும் சின்ன அருங்கால் ஆகிய கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரிய அருங்கால் கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியிலிருந்து நேற்று அதிகாலை வெளியேறிய 7 அடி முதலை ஒன்று ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் சாலையை கடந்து அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இதனைக்கண்டு அந்த வழியாக வந்தவர்கள் தாம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதலையை மீட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவல் கிராம மக்களுக்கு பரவியது. இதனால், அச்சமடைந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அந்த முதலையை காண திரண்டனர். இதனையடுத்து வண்டலூர் பூங்காவிலிருந்து வந்த ஊழியர்கள் முதலையை மீட்டு சென்றனர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட நெடுங்குன்றம், ஆலப்பாக்கம் மற்றும் சதானந்தபுரம் ஏரிகளில் முதலைகள் உள்ளன.

இதில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள முதலை குட்டிகளை கழுகுகள் இரைக்காக தூக்கி சென்று விடுகின்றன. அப்போது, அதனை கொத்தி சாப்பிட முடியாத நிலையால் ஏரிகளில் வீசிவிட்டு சென்று விடுகின்றன. இந்நிலையில், பெரிய அருங்கால் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து முதல் முறையாக 7 அடி முதலை ஒன்று விவசாய நிலத்துக்குள் புகுந்துள்ளது. மேலும், அந்த ஏரியில் 3 முதலைகள் உள்ளன,’’ என்றனர்.

The post ஊரப்பாக்கம் அருகே விவசாய நிலத்தில் புகுந்த முதலையால் பரபரப்பு: வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: