பள்ளிப்பட்டு: சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தின் பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, கீழ் நெடுங்கல் காலனியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பலவீனமடைந்திருந்த நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதந்காக பழைய கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்காலிகமாக கிராமத்தில் பலவீனமடைந்து மூடிவைக்கப்பட்டிருந்த கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து அங்கன்வாடி மையமாக பயன்படுத்தி அதில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். குறுகிய அறையில் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டு, அதே இடத்தில் சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இக்கட்டிடத்தில் குடிநீர், கழிப்பிடம், இட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
பழைய கட்டிடம் என்பதால், மேல் தளம் பலவீமடைந்தும், சுவர் விரிசல் விட்டு லேசான மழைக்கும் மழைநீர் அறை முழுவதும் நனைந்து விடுகிறது. மழை காலம் என்பதால், பலவீனமாக உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் கட்ட ஏதுவாக பழைய கட்டிடம் இடித்து 3 மாதங்கள் கடந்தும் இதுவரை புதிய கட்டிடப் பணிகள் தொடங்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, உடனடியாக புதிய அங்கன்வாடி மையம் கட்டிடப் பணிகளை தொடங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.
* காலி பணியிடங்கள்
பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் 109 அங்கன்வாடி மையங்களில் ஆசிரியர்கள் மற்றும் சமையலர் காலி பணியிடங்கள் 2 ஆண்டுகளாக நிரப்பாமல் இருப்பதாகவும், ஒரு ஆசிரியர் 2 முதல் 3 மையங்களில் பணியாற்றி வருவதால், குழந்தைகளை முறையாக கற்பித்தல் பயிற்சி வழங்க முடியாத நிலை உள்ளது. ஒன்றியத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
The post பள்ளிப்பட்டு அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணியை உடனே தொடங்க வேண்டும்: கிராம சேவை மைய கட்டிடத்தில் அவதிப்படும் குழந்தைகள் appeared first on Dinakaran.