புழல்: பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே துருப்பிடித்த பறிமுதல் வாகனங்களால் விஷபூச்சுகள் நடமாட்டம் அதிகரிப்பதால், அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் மது பாட்டில்கள், செம்மரக்கட்டைகளை ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வரும் கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கடத்தி வருகின்றனர்.
இதனால், பாடியநல்லூர் சோதனை சாவடியில் போலீசார், அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு கஞ்சா மற்றும் செம்மரக்கட்டைகள், மதுபாட்டில்கள் கடத்தப்படும் ஏராளமான வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து பலரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சோதனை சாவடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அந்த வாகனங்கள் துருப்பிடித்து மக்கும் நிலையில் உள்ளது.
இவ்வாறு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் பாம்புகள், விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் இருக்கிறது. மேலும், இரவு நேரங்களில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள சோதனை சாவடிக்குள் விஷ பூச்சுகள் உலா வருவதால், காவலர்கள் பயத்துடன் பணியாற்றி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பழுதாகி துருப்பிடித்து கிடக்கும் வாகனங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே துருபிடித்த பறிமுதல் வாகனங்களால் விஷபூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.