அடுத்தடுத்து விவாகரத்து அறிவிப்பு வெளியானதன் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பொய் தகவல்கள் பரப்புவதா? மகன் ஏஆர்ஆர்.அமீன் கண்டனம்

சென்னை: பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனான தனது 29 ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்வதாக, கடந்த 19ம் தேதி இரவு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் அறிவித்திருந்தார் அவரது மனைவி சாய்ரா பானு. இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் அன்றைய நள்ளிரவே வெளியிட்ட பதிவில், `திருமண வாழ்க்கையில் 30 ஆண்டுகளை எட்டிவிடுவோம் என்று நம்பினோம். ஆனால், எதிர்பாராத முடிவு ஏற்பட்டுவிட்டது’ என்று உருக்கத்துடன் கூறியிருந்தார். தனது விவாகரத்தை அவர் அறிவித்த மறுநாள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவிலுள்ள கிடார் கலைஞர் மோகினி டே என்பவர், தனது கணவர் மார்க் ஹார்ட்சுச்சை விட்டுப் பிரிவதாக அறிவித்திருந்தார்.

இந்த இரு விவாகரத்துக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. இந்த வதந்திகளுக்கு கண்டனம் தெரிவித்து, நேற்று தனது சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது: `என் தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு லெஜெண்ட். அவரது பணியைக் குறிப்பிட்டு நான் லெஜெண்ட் என்று சொல்லவில்லை. அவரது பண்புகளையும், இத்தனை ஆண்டுகள் அவர் சம்பாதித்து வைத்த மரியாதையையும் வைத்துதான் அவரை நான் ஒரு லெஜெண்ட் என்று சொல்கிறேன்.

ஆனால், சிலர் பொய்யான செய்திகளை பரப்புவதைப் பார்க்கும்போது மனம் உடைகிறது. மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, அதில் இருக்கும் உண்மையின் முக்கியத்துவத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். என் தந்தையைப் பற்றி இதுபோன்ற பொய்யான தகவல்கள் பரப்புவதை தவிர்க்க வேண்டும். அவரது கண்ணியத்தை நாம் போற்றி பாதுகாப்போம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த கிடார் கலைஞர் மோகினி டேவும், ஏ.ஆர்.ரஹ்மானும் அடுத்தடுத்த நாளில் விவாகரத்து செய்தியை அறிவித்ததால், பலர் சந்தேகப்பட்டு தங்களுக்கு தோன்றிய கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காகவே தங்களது துணையைப் பிரிந்துள்ளதாக தகவல் பரப்பினர். இதற்கு சாய்ரா பானு தரப்பு வழக்கறிஞர் வந்தனா ஷா விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறுகையில், ‘இதற்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவரும் தங்களின் விவாகரத்து முடிவை சுயமாக யோசித்து எடுத்தனர். ஆழமாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவான அது லேசானது அல்ல. இது பரஸ்பர விவாகரத்து ஆகும். அதனால், நிதி பகிர்வு குறித்து எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை’ என்றார்.

The post அடுத்தடுத்து விவாகரத்து அறிவிப்பு வெளியானதன் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பொய் தகவல்கள் பரப்புவதா? மகன் ஏஆர்ஆர்.அமீன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: