எஸ்ஐக்கு வழங்கிய அரசு வாகனத்தை சேதப்படுத்திய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஓய்வு பெற்ற டிஎஸ்பி மீது வழக்கு: மயிலாப்பூர் போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வரும் எஸ்ஐக்கு வழங்கப்பட்ட அரசு பைக் மற்றும் அவரது மனைவி பைக்கை சேதப்படுத்திய, பெண் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் அவரது கணவரான ஓய்வு பெற்ற டிஎஸ்பி மீது சிசிடிவி ஆதாரங்களின் படி மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் இளையராஜா. உதவி ஆய்வாளரான இவர், தற்போது சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் அதே குடியிருப்பின் கீழ் தளத்தில் பெண் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வசித்து வருகிறார். ஜெயலட்சுமியின் கணவர் சவுந்தர்ராஜன் ஓய்வு பெற்ற ஆயுதப்படை டிஎஸ்பி. இவர்கள் வசிக்கும் வீட்டை சுற்றியுள்ள பொது பயன்பாட்டிற்கு சொந்தமான 1000 சதுரடி அரசு நிலத்தை ஆக்கிரமித்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வீடு ஒன்று கட்டி வருகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி உதவி ஆய்வாளர் இளையராஜா கடந்த ஏப்ரல் 10ம் தேதி தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையருக்கு தபால் மூலம் புகார் அளித்திருந்தார். அதேநேரம் இந்த இடம் தொடர்பாக உதவி ஆய்வாளர் இளையராஜா கடந்த மே 7ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றம், ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனால் உதவி ஆய்வாளர் இளையராஜா மீது இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஓய்வு பெற்ற டிஎஸ்பி சவுந்தர்ராஜன் ஆகியோர் ஆத்திரத்தில் இருந்தனர். இதற்கிடையே கடந்த ஜூன் 3ம் தேதி உதவி ஆய்வாளர் இளையராஜாவுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட பைக் மற்றும் அவரது மனைவியின் மொபட் ஆகியவை, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் அந்த 2 வாகனங்களின் இருக்கை கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது. உடனே உதவி ஆய்வாளர் இளையராஜா அதை சரிசெய்துள்ளார். பிறகு ஜூன் 10ம் தேதி மீண்டும் அவரது 2 இருசக்கர வாகனங்களின் இருக்கைகள் கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது. உடனே உதவி ஆய்வாளர் இளையராஜா குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து பார்த்த போது, பெண் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் அவரது கணவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் கத்தியால் உதவி ஆய்வாளர் இளையராஜவின் 2 வாகனங்களின் இருக்கையை கிழிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. எனவே இதுகுறித்து சிசிடிவி காட்சிகளுடன் உதவி ஆய்வாளர் இளையராஜா தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு கேட்டு மயிலாப்பூர் காவல் நியைத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி, விசாரணை நடத்திய போலீசார், பெண் இன்ஸ்பெக்டர் தனது கணவருடன் அரசு வாகனம் உள்பட 2 வாகனத்தை சேதப்படுத்தியது உறுதி செய்தனர். அதைதொடர்ந்து தற்போது அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் அவரது கணவரான ஓய்வு பெற்ற டிஎஸ்பி சவுந்தர்ராஜன் மீது 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

The post எஸ்ஐக்கு வழங்கிய அரசு வாகனத்தை சேதப்படுத்திய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஓய்வு பெற்ற டிஎஸ்பி மீது வழக்கு: மயிலாப்பூர் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: