நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன், சீமான் திடீர் சந்திப்பு: தமிழக அரசியல் நிலவரம் குறித்து 40 நிமிடம் ஆலோசனை

சென்னை: நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு ஆதரவு தெரிவித்து, ‘தம்பியின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துக்கள்’ என்றெல்லாம் கூறி பாராட்டி பேசினார். ஆனால் விஜய், தான் நடத்திய முதல் மாநாட்டில் சீமானை நையாண்டி செய்து பேசினார். இதனால் கடுப்பான சீமான், ஆரம்பத்தில் தன்னை எதிர்த்தாலும், நான் அவரைத்தான் ஆதரிப்பேன் எனக் கூறி வந்த நிலையில், மாநாட்டுக்குப் பிறகு ‘‘இனி தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது” என்று ஒரே போடாக போட்டு விஜய் உடன் மோதலை தொடங்கினார். ‘திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள்’ என்ற விஜய்யின் கொள்கை பிரகடனத்துக்கு சீமான் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அதேநேரம், சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது சீமானுக்கு சற்று பதற்றத்தைக் கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல், நாதக நிர்வாகிகள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக வந்த செய்திகள், சீமானுக்கு பேரதிர்ச்சியாக அமைந்து விட்டது.

இதுஒருபுறம் இருக்க, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த போது, சீமான் அவருக்கு நேரெதிரான நிலை எடுத்து அவரை மிகக் கடுமையான வார்த்தைகளில்் விமர்சித்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்தவுடன், சீமான் தனது விமர்சனங்களை நிறுத்திக் கொண்டார். ரஜினிகாந்த்தை அரசியல் ரீதியாக விமர்சித்து கடும் சொற்களைப் பயன்படுத்தியது காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்றும் கூட கூறியிருந்தார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சித்த சீமான், அவர் அரசியலுக்கு வரவில்லை என்றவுடன் தனது நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றிக் கொண்டார். இந்தச் சூழலில் சீமான் தற்போது திடீரென நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டுக்கு ஓடிச்சென்று சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் இந்த ரகசிய சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நடந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் விஜய் வருகையை இப்போது சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்தை சீமான் சந்தித்துள்ளது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதாவது, விஜய்யை கடுமையாக எதிர்க்கும் சூழலில் ரஜனிகாந்த் ரசிகர்களை தன் வளையத்துக்குள் கொண்டு வரும் திட்டத்துடன் ரஜினிகாந்தை சீமான் சந்தித்திருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் சீமான் ரஜினியிடம் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

The post நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன், சீமான் திடீர் சந்திப்பு: தமிழக அரசியல் நிலவரம் குறித்து 40 நிமிடம் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: