ஒட்டன்சத்திரம்: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஆயக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் டிசம்பர் 13ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபங்களை ஏற்றி வழிபடுவார்கள். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாமியார்புதூர், சீரங்கவுண்டன்புதூர், நால்ரோடு, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வரும் மொத்த வியாபாரிகள் 1000 விளக்குகள் ரூ.700 என்ற விலையில் கொள்முதல் செய்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதிகளில் தயாரிக்கப்படும் விளக்குகள், மூலனூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, தாராபுரம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து கார்த்திகை தீபம் தயாரிக்கும் தொழிலாளி சாமியார்புதூரை சேர்ந்த ராஜேஸ்வரி கூறுகையில், ‘‘இப்பகுதியில் தற்போது அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தினமும் 1000க்கும் மேற்பட்ட விளக்குகளை மட்டுமே தயாரிக்க முடியும். சொற்ப லாபத்தில் இத்தொழிலை செய்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நாங்கள் தொடர்ந்து இத்தொழில் ஈடுபட தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்’’ என்றார்.
The post கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஆயக்குடியில் தயாராகும் அகல் விளக்குகள் appeared first on Dinakaran.