புத்தர் சிலையை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?

புத்தர் சிலையை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

வணங்கலாம். ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர், சாயிபாபா, இயேசுபிரான் போன்று புத்தரும் மனிதராக வாழ்ந்து இறைநிலையை அடைந்தவர் என்பதால், புத்தர் சிலையை பூஜை அறையில் வைத்து வணங்கலாம். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் புத்தரை வணங்க வேண்டும் என்பதில்லை. மகான்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமில்லை. அவர்கள் சொன்ன கருத்துகளை முடிந்தவரை நம் வாழ்வில் கடைபிடித்து வரவேண்டும் என்பதே முக்கியம்.

?ஆலயத்தில் உள்ள தூண்களில் ஒரு வித்தியாசமான மிருகத்தின் சிலை தென்படுகிறதே, அந்த மிருகம் உண்மையில் வாழ்ந்த உயிரினமா அல்லது கற்பனையா?
– திருமலைகுமரன், ஈரோடு.

“யாளி’’ என்பது அந்த மிருகத்தின் பெயர். யானை மற்றும் சிங்கத்தின் இணைவாக அந்த மிருக உருவத்தைச் செதுக்கியிருப்பார்கள். இந்த மிருகம் டைனோசரைப் போன்று ஒரு காலத்தில் வாழ்ந்ததாகவும், தற்போது அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அது ஒரு கொடூரமான விலங்கு என்றும், அது ஈன்ற குட்டியின் முதல் வேட்டையே யானைதான் என்றும் வரலாற்று நாவல் ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். என்றாலும், அதுபோன்ற ஒரு மிருகம் உயிருடன் இருந்ததாக இதுவரை எந்தவிதமான நேரடிச் சான்றும் கிடைக்கவில்லை. பாலையும், தண்ணீரையும் பிரித்தறியும் அன்னப்பறவை ஒரு காலத்தில் வாழ்ந்த ஒரு பறவை என்று சொல்வதைப் போல, யாளி என்ற மிருகத்தையும் அவ்வாறே வாழ்ந்ததாக கற்பனையாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், அறிவியல் ரீதியான சான்றுகள் கிடைக்கும்வரை அவற்றை கற்பனை என்ற எல்லைக்குள்தான் வைக்க வேண்டும் என்பது என் கருத்து.

?ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா?
– எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

‘ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து’ என்ற சொற்றொடர் காலப்போக்கில் ‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து’ என்று மருவி இருக்கிறது. உண்மையான உருவினைத் தெரியாமல் நாம் தவறாகப் புரிந்துகொள்ளும் பல பழமொழிகளுள் இதுவும் ஒன்று. ஆயிரம் பேர்கூட இல்லாமல் ஒரு கல்யாணத்தை நடத்தக் கூடாது என்பதிலும், கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகளிலாவது ஆயிரம் பேருக்கு நாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதிலும், நம் முன்னோர்கள் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் வயிறாற உணவருந்தி வாழ்த்தும்போது, அந்த வாழ்த்துகள் தம்பதியரை நூறாண்டு காலம் வாழ வைப்பதோடு, வம்சத்தையும் தழைக்க வைக்கும்.

?இரட்டைத்திரி போட்டுத்தான் விளக்கேற்ற வேண்டுமா?
– டி.என்.ரங்கநாதன், திருச்சி.

திரி காற்றில் அணையாத அளவிற்கு பருமனாக இருந்தால் ஒற்றைத்திரிகூட போதும். இரட்டைத்திரி போட்டுத்தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்றெல்லாம் விதிமுறை ஏதும் கிடையாது. விளக்கில் ஏற்றப்படும் திரியானது எளிதில் அணைந்து விடக்கூடாது என்பதற்காக சற்று பருமனாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைதான் இந்த இரட்டைத்திரி.

?அமாவாசையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதா?
– ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

இது முற்றிலும் தவறான கருத்து. தை அமாவாசை நாளில் உங்கள் நண்பரின் இல்லத்தில் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனால் குடும்பமே வருத்தத்தில் இருப்பதாகவும் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அமாவாசை நாளில் குழந்தை பிறப்பதால் குடும்பத்திற்கு ஆகாது என்ற கருத்தில் உண்மை இல்லை. பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. இறைவனின் எண்ணப்படியே இந்த உலகம் இயங்குகிறது. நமக்கு எது நன்மையோ, அதைத்தான் இறைவன் தந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். எல்லாம் அவன் செயல் என்று இருந்துவிட்டால், கவலைப்பட வேண்டியதில்லை. ஆஞ்சநேயர் அவதரித்தது அமாவாசையில், கிருஷ்ணர் பிறந்தது அஷ்டமியில், ராமர் பிறந்தது நவமியில் என்று உங்கள் நண்பருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அமாவாசை நாளில் பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே வீட்டில் அமர்ந்திருப்பர். லக்ன பாவத்திலிருந்து சூரியனும், சந்திரனும் இணைந்திருக்கின்ற பாவகத்தின் தன்மையைப் பொறுத்து பலன் மாறுபடும். அது நற்பலனைத் தருவதாகவும் இருக்கலாம். பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு ஜாதகம் பார்ப்பது தவறு. மேலும், ஒரு குழந்தை பிறந்த நேரத்தினால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. அவரவர் ஜாதக பலனே அவரவருக்கு உரிய பலனைத் தரும். அமாவாசையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே.

?சிவாலயங்களில் நவகிரஹங்கள் உள்ளன. அதுபோல பெருமாள் கோயில்களில் நவகிரஹங்கள் இல்லையே, அது ஏன்?
– பாஸ்கரன், பெருமாள்பட்டு.

800 ஆண்டுகளுக்கு முன்னர்வரை நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சந்நதியோ, தனியாக உருவ வழிபாடோ செய்யப்படவில்லை. தனிமனிதருக்கு ஜாதகம் எழுதும் பழக்கம் தோன்றிய பின்னர் பரிகார பூஜைகள் செய்வதற்காகவும், விளக்கேற்றி வழிபடுவதற்காகவும் உருவாக்கப்பட்டதே நவக்கிரக சந்நதி. சைவ சமயத்தைப் பொறுத்தவரை இறைசக்தியின் பல்வேறு வடிவங்களான விநாயகர், முருகன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள் என கடவுளர்கள் மட்டுமல்லாது இறைவனுக்கு தொண்டாற்றிய நாயன்மார்களைக்கூட தெய்வங்களாக வணங்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. ஆனால், வைணவ சமயம் அனைத்தும் நாராயணனே என்பதை அறுதியிட்டு சொல்கிறது. உலகத்தில் நிகழும் அத்தனை நிகழ்வுகளுக்கும் காரணம் பெருமாளே என்று உறுதியாக உரைக்கிறது. ஆதலால் பழமை வாய்ந்த பெருமாள் கோயில்களில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. எனினும், தற்காலத்தில் புதிதாக உருவாகும் பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவதாக கேள்விப் படுகிறோம்.

The post புத்தர் சிலையை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா? appeared first on Dinakaran.

Related Stories: