வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: வழக்கறிஞர் கண்ணன் தாக்கப்பட்டதை கண்டித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று உயர் நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓசூரில் வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று உயர் நீதிமன்றம் ஆவின் நுழைவாயில் அருகே என்எஸ்சி போஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணை தலைவர் அறிவழகன், பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் வி.எம்.ரகு, முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், முன்னாள் செயலாளர் எம்.வேல்முருகன், முன்னாள் துணை தலைவர் முரளி, மூத்த செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி என்.எஸ்.ரேவதி, முன்னாள் துணை தலைவர் நளினி உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், நீதிமன்றங்களில் சிசிடிவி கேமரா, உரிய சோதனை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷம் எழுப்பினர். பின்னர் வழக்கறிஞர்கள் என்.எஸ்.சி. போஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இரு பக்கமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தால் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்த கண்ணன் (30) என்கிற வழக்கறிஞர் நேற்று முன்தினம் நீதிமன்ற நுழைவாயிலில் வைத்து, கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை கண்டித்து, அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர், நீதிமன்றம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: