சீமானின் ஓட்டல் பில்லை கட்ட முடியல..: நாதக நிர்வாகி குமுறல் வீடியோ வைரல்

சேலம்: சீமான் ஓட்டலில் தங்கியதற்கு பில்லை கட்ட முடியவில்லை என்று நாதக நிர்வாகி குமுறிய வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தியில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். கடந்த 18ம் தேதி சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, 19ம் தேதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், 20ம் தேதி மேட்டூர் நகர துணை தலைவர் ஜீவானந்தம் 40 பேருடன் அக்கட்சியை விட்டு விலகுவதாக முகநூல் பக்கத்தில் அறிவித்தனர். இதனிடையே, சேலத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் எதற்காக கட்சியை விட்டு வெளியேறினார்கள் என்பது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலானது.

அதில், சீமானை சேலத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து 5 ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தனர். ஓட்டல் பில் ரூ.64 ஆயிரம் வந்துள்ளது. இந்த தொகையை கொடுக்க முடியாமல் நிர்வாகிகள் தவித்துள்ளனர். பின்னர், கட்சி நிர்வாகிகள் கடன் வாங்கி கொஞ்சம், கொஞ்சமாக ஓட்டலின் தொகையை கொடுத்ததாகவும், கட்சி தலைவருக்கு செலவு செய்ய முடியாமலே கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு நாதகவில் இருந்து வெளியேறிய சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை கூறுகையில், ‘சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சீமான் வந்தார்.

அப்போது அவரை 5 ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தோம். கூடுதலாக ஒரு அறை வாடகை, கட்சி நிர்வாகிகள் உணவு சாப்பிட்டது என்று மொத்தமாக ரூ.64 ஆயிரம் பில் தொகை வந்தது. இதில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் செலுத்தினேன். பின்னர், சிறிது நாட்கள் கழித்து ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி மீதி தொகையை செலுத்தினேன். கட்சி நிர்வாகி என்ற முறையில் கட்சிக்காகத்தான் நான் செலவுசெய்தேன். நாங்கள் கட்சியில் இருந்து வெளியே வந்தது, சீமான், கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியால்தான். நாம், நாம் என்றிருந்த சீமான், நான், நான் என கூறுகிறார். எங்களின் கருத்துக்களை கேட்காததால்தான் கட்சியை விட்டு வெளியேறினேன்,’’ என்றார்.

 

The post சீமானின் ஓட்டல் பில்லை கட்ட முடியல..: நாதக நிர்வாகி குமுறல் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: