ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் அடுத்த 2 நாட்களில் வட மேற்குத்திசையில் தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனிடையே மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யகூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனால் இன்றும் நாளையும் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அப்பகுதிகளில் 27,28 ஆகிய தேதிகளில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அன்றைய தினங்களிலும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
The post தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.