சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகே நரையன்குடியிருப்பில் அமைக்கப்பட்ட புதிய குளத்திற்கு வரத்து கால்வாய் இல்லாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே நரையன்குடியிருப்பில் அதே ஊரைச் சேர்ந்த 4 விவசாயிகள் புதிதாக குளம் அமைத்து நீர்வளத்தை பெருக்க தானமாக நிலம் வழங்கினர். இதையடுத்து அப்போதைய மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஏற்பாட்டில் தெற்கு நரையன்குடியிருப்பில் கடந்த 2019ம் ஆண்டு புதிய குளம் அமைக்கப்பட்டது.
இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் சடையனேரி கால்வாய் மூலம் முதலூர் ஊரணிக்கு அடுத்து வரும் பாதையில் வரத்து கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கால்வாய் உயரமாக இருப்பதால் நீர்வரத்து இருக்காது என அப்போதே விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அப்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு வரத்து கால்வாயை உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தற்போது வரத்து கால்வாய் தூர்ந்து போய்விட்டது.
இந்த குளத்திற்கு தண்ணீர் வர வேண்டிய பாதை ஊரணியிலிருந்து இடது பகுதியில் தண்ணீர் செல்லும் பாதை இருக்கிறது. இந்த பாதையை தாண்டி ஒரு தடுப்பணை அமைத்தால் மட்டுமே இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நிலை உள்ளது. ஆனால் குளத்தில் தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்டு காணப்படுகிறது.
எனவே, இக்குளத்தை கலெக்டர் பார்வையிட்டு குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து கால்வாய் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நிலம் தானமாக கொடுத்தவர்கள், விவசாயிகள், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச் சங்க செயலாளர் லூர்துமணியிடம் இதுதொடர்பாக எடுத்துரைத்த நிலையில் புதிய குளத்தை சாத்தான்குளம் யூனியன் பிடிஓ ராஜேஷ், உதவி பொறியாளர் அருணா பார்வையிட்டனர். அப்போது வரத்து கால்வாய் அமைத்து தருவதுடன் தடுப்பணை அமைப்பதுடன், வடக்கு நரையன்குடியிருப்பில் சாலையில் தண்ணீர் செல்வதை தடுத்து 3 குழாய் அமைத்து தண்ணீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
சடையனேரி கால்வாயில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதலூர் ஊரணிக்கு தண்ணீர் வருகிறது. அதன்பிறகு இந்த புதிய குளத்திற்கு தண்ணீர் வரும். அதற்குள் வரத்து கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்தும் ஒரு சொட்டுகூட வரவில்லை நரையன்குடியிருப்பில் வறண்டு கிடக்கும் புதிய குளம் appeared first on Dinakaran.