நெம்மேலி குப்பத்துக்கு, அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்துக்கு கடலில் இருந்து கடல் நீர் எடுத்து வருவதற்காக ராட்சத குழாய்கள் அமைக்க பல அடி தூரத்திற்கு பாறாங்கற்கள் கொட்டப்பட்டது. மேலும், அங்கு கொட்டப்பட்ட கற்களால் அருகில் உள்ள நெம்மேலி குப்பத்தில் கடல் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால், அங்குள்ள மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்த இடவசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு சில நேரங்களில், கரையில் நிறுத்தி வைக்கும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி உடைந்து கரை ஒதுங்குவது தொடர் கதையாக உள்ளது. கடந்த, மாதம் கடற்கரையொட்டி உள்ள வெங்கடம்மன் கோயில் முன் மண்டபம் இடிந்து விழுந்தது. இங்கு, தூண்டில் வளைவு அமைத்து தர கோரி பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை, ஏற்று கடந்தாண்டு தூண்டில் வளைவு, மீன் இறங்குதளம் மற்றும் வலை பின்னும் கூடம் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், நிதி ஒதுக்கி ஓராண்டை கடந்தும் இன்னும் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கபடாமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த, 15ம் தேதி தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடற்கரையொட்டி உள்ள வெங்கடம்மன் கோயில் முன்பு திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நெம்மேலி மீனவர் குப்பம் கடலில் கடலரிப்பை தடுக்கும் வகையில், அங்கு நேர்கல் தடுப்பு அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இருப்பினும், தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் கடலரிப்பு தடுப்பு பணி: தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.