ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஊராட்சியில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள காவல் நிலையம் பகுதியில் இருந்து பெருமாள் கோயில் வரை சுமார் 800 மீட்டர் தூரம் உள்ள தார்ச்சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது, இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை, அப்பகுதியை சேர்ந்த நம்பாலீஸ்வரர் கோயில் தெரு, ஊராட்சி மன்ற அலுவலக தெரு, தோட்டகார தெரு, தர்மராஜா கோயில் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் சாலை சரியில்லாததால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, காவல் நிலையம் முதல் பெருமாள் கோயில் தெரு வரை புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, சாலை அமைக்க முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47.78 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி நேற்று பெரியபாளையம் காவல் நிலையம் முதல் பெருமாள் கோயில் வரை தார்ச்சாலை அமைக்கும் பணியை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
The post பெரியபாளையம் ஊராட்சியில் ரூ.47.78 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணி appeared first on Dinakaran.