மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இன்று முதல் கடலோர பாதுகாப்பு படையின் சீ விஜில் எனும் 2 நாள் கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி துவங்கியது. இதைத் தொடர்ந்து, இசிஆர் சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடலோர பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டது. மேலும், கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து அடிக்கடி கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, மாமல்லபுரத்தில் இன்று காலை ‘சீ விஜில்’ எனும் கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு 2 நாள் ஒத்திகை பயிற்சி துவங்கியது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி கடலோர காவல்படை எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட கடலோர போலீசார் படகு மூலம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். மேலும், கடலுக்கு சென்று மீன்பிடித்து திரும்பிய மீனவர்களின் படகுகளையும், அவர்களின் மீன்பிடி வலைகளையும் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், கல்பாக்கம் அணுமின்நிலைய கடல் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர, மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில் முதல் பூஞ்சேரி 4 வழி சாலை சந்திப்பு வரை டிஎஸ்பி டிஎஸ்பி ரவி ஆபிராம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட சட்டம்-ஒழுங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனையில் சந்தேக நபர்களோ அல்லது வெடிபொருட்கள், ஆயுதங்களோ பிடிபடவில்லை என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.
The post மாமல்லபுரத்தில் 2 நாள் கடலோர பாதுகாப்பு ஒத்திகை: போலீசார் வாகன தணிக்கை appeared first on Dinakaran.