ஆர்.கே.பேட்டை விபத்து நடந்த இடத்தில் நீதிபதி நேரில் ஆய்வு செய்து தீர்ப்பு: குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை


ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை பஜாரில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் விபத்து நடைபெற்ற இடத்தில் நேற்று நீதித்துறை நடுவர் நேரில் ஆய்வு செய்து, குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் ஜமுனா, மகேஸ்வரி என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். லாரி மோதியதில் கடைகளும் சேதமானது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த 18 ஆண்டுகளாக பள்ளிப்பட்டு, திருத்தணி நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை தொடர்பாக, நேற்று பள்ளிப்பட்டு மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ.தரணிதரன் நேரில் ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கினார். இந்த ஆய்வின்போது ஆர்.கே.பேட்டை போலீஸ் எஸ்ஐ ராக்கிகுமாரி, அரசு குற்றவியல்துறை வழக்கறிஞர் (பொறுப்பு) என்.வசந்த், வழக்கறிஞர் டி.சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளி பரசுராமனுக்கு 2 வருட சிறைத் தண்டனை மற்றும் 29,500 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் தரணிதரன் சம்பவ இடத்திலேயே தீர்ப்பளித்தார்.

The post ஆர்.கே.பேட்டை விபத்து நடந்த இடத்தில் நீதிபதி நேரில் ஆய்வு செய்து தீர்ப்பு: குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: