கோடம்பாக்கம் – போரூர் வரை மெட்ரோ மேம்பால தூண்கள் அமைக்கும் பணி 100% நிறைவு: பல்வேறு சவால்களை கடந்து வெற்றி

சென்னை: மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தட மெட்ரோ ரயில் திட்டத்தில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரை, 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக முடித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது. இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2 ஆயிரத்து 255 அஸ்திவார தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டக் குழுவும், ஒப்பந்ததாரர்களும் பல சவால்களை எதிர்கொண்டனர். குறிப்பாக 24.45 கி.மீ நீளத்திற்கு பொது பயன்பாட்டில் உள்ள உயர்மின் விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால் போன்ற பயன்பாடுகளை மாற்று வழியில் செயல்படுத்துதல் மற்றும் 1,200 மி.மீ, நீளத்திற்கு நீர்வழிப்பாதை போன்ற முக்கியமான உள்கட்டமைப்பை பாதுகாக்க வழித்தட தூண்கள் அமையவுள்ள இடங்களை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் 1,500 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதையை நீர் விநியோகத்திற்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக மாற்று வழியில் செயல்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ஜி.சி.2-ஏஇஓஎன் நிறுவனத்தின் குழு தலைவர் முருகமூர்த்தி, எல் அண்டு டி நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஜெயராமன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இதனை பார்வையிட்டு, வாழ்த்து தெரிவித்தனர்.

The post கோடம்பாக்கம் – போரூர் வரை மெட்ரோ மேம்பால தூண்கள் அமைக்கும் பணி 100% நிறைவு: பல்வேறு சவால்களை கடந்து வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: