முதன்முறையாக கராச்சியில் இருந்து சிட்டகாங் துறைமுகம் சென்ற கப்பல் பாகிஸ்தானின் பாதையை வங்கதேசமும் தேர்ந்தெடுக்கிறதா?.. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் கடல் வர்த்தகம்

டெல்லி: முதன்முறையாக கராச்சியில் இருந்து சிட்டகாங் துறைமுகத்திற்கு பாகிஸ்தான் கப்பல் சென்ற நிலையில், அது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் உருவான வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இந்திய எல்லைப் பகுதியை பகிர்ந்துள்ன. வங்கதேச பிரிவினைக்கு பின்னர் அந்நாடு இந்தியாவுடன் நட்பு கொண்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் – இந்தியா உறவு என்பது எப்போதும் பதற்றத்திலேயே உள்ளது. சமீபத்தில் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததை அடுத்து, அந்நாட்டில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்திய எதிர்ப்பு மனநிலை மக்களிடையே அதிகரித்துள்ளதால் வங்கதேசம் – இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவில் நம்பகத்தன்மையற்ற நிலை இருப்பது போல், இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவில் எதிர்காலத்தில் நம்பகத்தன்மையற்ற சூழல் அமைந்துவிடுமோ? என்ற கருத்தும் ஏற்பட்டுள்ளது.  அதனை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தானின் சரக்கு கப்பல் ஒன்று கடந்த வாரம் வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தை அடைந்தது. இது சாதாரண விஷயம் போல் தெரிந்தாலும், அதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் முதல் முறையாக பாகிஸ்தான் சரக்கு கப்பல் ஒன்று வங்கதேசம் சென்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் நேரடி கடல் தொடர்பு இதுவாகும். கடந்த 1971 வங்கதேச விடுதலைப் போருக்குப் பிறகு மோசமடைந்து வரும் உறவுகளை சரிசெய்வதற்கு இரு தரப்பினரும் முயற்சித்து வரும் நிலையில், கராச்சியில் இருந்து வந்த சரக்கு கப்பல் வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் தனது சரக்குகளை கையாண்டது.

பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே உள்ள நேரடி கடல்வழி இணைப்பு, இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் புதிய சிக்கல்களை உருவாக்கி உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகாமையில் வங்கதேசம் இருப்பதால், பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான கடல் வர்த்தகம் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக யுவான் ஜியாங் ஃபா ஜான் என்ற 182 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பல், பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வங்கதேசத்தின் சிட்டகாங் வந்தடைந்தது. பின்னர் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்தின் ஜவுளித் தொழிலுக்கான அடிப்படை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பொதுவாக பாகிஸ்தானிய பொருட்கள் வங்கதேசத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் இலங்கை, மலேசியா அல்லது சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஃபீடர் கப்பல்களில் அனுப்பப்பட்டன.

இருப்பினும், கடந்த செப்டம்பரில் வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசு அமைந்த பின்னர், பாகிஸ்தான் பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது. தொடர்ந்து நேரடி கடல்வழி இணைப்பை ஏற்படுத்தவும், பாகிஸ்தானுடன் வலுவான உறவுகளை மேம்படுத்தவும் வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் தொடர்ந்து முன்னிலை கொடுத்து வருகிறது. வங்கதேசத்தின் பாகிஸ்தான் தூதர் சையத் அகமது மரூப் வெளியிட்டுள்ள பதிவில், ‘இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்க நேரடி கப்பல் பாதை என்பது மிகப்பெரிய படியாகும். இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்’ என்று பதிவிட்டுள்ளார். ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கம் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கி வருகிறது.

இந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் இருவரும் விவாதித்தனர். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பாகிஸ்தான் – வங்கதேச உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் உருவாக வேண்டும் என்று யூனுஸ் சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். இதன்மூலம் பாகிஸ்தானின் பாதையில் வங்கதேசமும் செல்வதாகத் தெரிகிறது. வங்கதேச அரசியலமைப்பில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகமது அசாதுஸ்ஸாமான் வலியுறுத்தியுள்ளார். இந்த முன்மொழிவு முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வங்கதேசத்தில் புதிய அரசியலை முன்னெடுத்துள்ளன.

அதுதான் வங்கதேசத்தை இஸ்லாமிய நாடாக அறிவிக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தவிர, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்தவும் வங்கதேசம் கோரிக்கை விடுத்து வருகிறது. ஏற்கனவே ஹேக் ஹசீனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீது இனப்படுகொலை, கொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணையை எதிர்கொள்ள டாக்கா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஷேக் ஹசீனா குறித்து முகமது யூனுஸ் அளித்த பேட்டி ஒன்றில், ‘இந்தியாவில் தஞ்மடைந்திருக்கும் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோருவோம்’ என்றார். அதேபோல் இந்த மாத தொடக்கத்தில், ஷேக் ஹசீனாவின் அரசில் அங்கம் வகித்த முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பியோடியதால் அவர்களுக்கு எதிராக இன்டர்போல் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்படும் என்றும் வங்கதேச அரசு கூறியுள்ளது.

எல்லை தாண்டிய தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் போன்ற விசயங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசும், ராணுவமும் செயல்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் – வங்கதேசம் இடையே வளர்ந்து வரும் உறவுகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விஷயமாக மாறக்கூடும். மேலும் இந்திய பிராந்தியத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஈடுபாடு அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர். போதைப் பொருள் வர்த்தக களமாக வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது. அதனால் சிட்டாங் துறைமுகத்தை கண்காணிக்க ஷேக் ஹசீனா அரசு இந்தியாவின் உதவியை நாடியது. அதன்படி கண்காணிப்பில் ஈடுபட்டதன் மூலம் கடந்த 2004ல் சுமார் 1,500 பெட்டிகள் சீன வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு 4.5 முதல் 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான இண்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) மூலம் இந்த வெடிமருந்துகள் சப்ளை செய்யப்பட்டன. இந்த சரக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான உல்ஃபா (ஐக்கிய விடுதலை முன்னணி) அமைப்புக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அளித்த பேட்டி ஒன்றில், ‘இந்தியா – வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பொருளாதாரம், பாதுகாப்பு, நதிநீர் பங்கீடு மிகவும் முக்கியமானவை. வங்கதேசத்தில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் இந்தியாவை அதிருப்தி அடையச் செய்திருக்கும். ஆனால் அதனால் ஏற்பட்ட மாற்றங்களால் இந்தியா மகிழ்ச்சி அடையும். ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு இல்லாமல் முன்னேற முடியாது.

எல்லாத் துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு இருக்கும்’ என்றார். வங்கதேசத்தில் வசிக்கும் மத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்களை குறிவைத்து மத பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சில அமைப்புகள் குறிவைத்து தாக்கி வருகின்றன. சமீபத்திய நிகழ்வுகளுக்கு இந்தியா தரப்பில் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது. ஐநா அறிக்கையின்படி, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நடந்த வன்முறைப் போராட்டங்களில் இந்துக்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்துடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாகிஸ்தானின் பாதையை வங்கதேசம் தேர்வு செய்துள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது. அதுபோன்ற உறவுகள் வலுப்பெறுமாயின் அது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்தவும் வங்கதேசம் கோரிக்கை விடுத்து வருகிறது. ஏற்கனவே ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீது இனப்படுகொலை, கொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணையை எதிர்கொள்ள டாக்கா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

வங்கதேச அரசியலமைப்பில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகமது அசாதுஸ்ஸாமான் வலியுறுத்தியுள்ளார். இந்த முன்மொழிவு முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வங்கதேசத்தில் புதிய அரசியலை முன்னெடுத்துள்ளன. அதுதான் வங்கதேசத்தை இஸ்லாமிய நாடாக அறிவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post முதன்முறையாக கராச்சியில் இருந்து சிட்டகாங் துறைமுகம் சென்ற கப்பல் பாகிஸ்தானின் பாதையை வங்கதேசமும் தேர்ந்தெடுக்கிறதா?.. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் கடல் வர்த்தகம் appeared first on Dinakaran.

Related Stories: