அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான தடை நீக்கம்; ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைகிறது?… டிரம்ப் பதவியேற்கும் நிலையில் ஜோ பைடன் திடீர் முடிவு

நியூயார்க்: ரஷ்யா – உக்ரைன் போரில் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை ஜோ பைடன் நீக்கியுள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைய உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான ேபார் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை ஜோ பைடன் நீக்கியுள்ளார். அதனால் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

ஜோ பைடனின் இந்த முடிவால், முதன்முறையாக ரஷ்யாவிற்குள் இருக்கும் ராணுவ இலக்குகளின் மீது உக்ரைனால் தாக்குதல் நடத்த முடியும். இருப்பினும், அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஏவுகணைகளை ரஷ்யாவிற்குள் பயன்படுத்துதல் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்த போது, இந்த உத்தரவுகளை பிறப்பிக்காத ஜோ பைடன், தற்போது புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் இந்த முடிவை அறிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதாக டிரம்ப் அறிவித்த நிலையில், தற்போது ஜோ பைடன் எடுத்துள்ள முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேநேரம் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான வடகொரியா வீரர்களை அனுப்பி வைப்பதாக அந்நாடு அறிவித்தது.

அதையடுத்து போர் பதற்றம் அங்கு அதிகரித்துள்ளதால், உக்ரைனுக்கு உதவும் வகையில் இந்த முடிவை ஜோ பைடன் நிர்வாகம் எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தநிலையில், அமெரிக்காவின் கொள்கை முடிவில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தனக்கு அதிகாரபூர்வ தகவல் எதுவும் அளிக்கப்படவில்லை என்று உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி என்று கூறியுள்ளார். ரஷ்யாவின் 1,000 சதுர கி.மீ நிலப்பரப்பை உக்ரைன் கைப்பற்றியுள்ளதால், அங்கிருந்து இனிமேல் ரஷ்ய நகரங்களை உக்ரைன் தாக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான தடை நீக்கம்; ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைகிறது?… டிரம்ப் பதவியேற்கும் நிலையில் ஜோ பைடன் திடீர் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: