சபரிமலையில் இருந்து திரும்பியபோது கூகுள் மேப் பார்த்து வாகனம் ஓட்டி சேற்றில் விழுந்த மாற்றுத்திறனாளி: இரவு முழுவதும் தவித்த பரிதாபம்

பட்டிவீரன்பட்டி: சபரிமலையில் இருந்து கர்நாடகாவுக்கு மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர், கூகுள் மேப்பை பார்த்து வாகனம் ஓட்டி சென்றபோது ஓடை சேற்றில் சிக்கி தவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதி ஓடையில் மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் ஒருவர் 3 சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கியுள்ளதாக, வத்தலக்குண்டு போலீசுக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சென்று மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்டனர். விசாரணையில், ‘‘கர்நாடகா மாநிலம், மங்களூருவை சேர்ந்தவர் பரசுராமர் (30). மாற்றுத்திறனாளியான இவர் ஐயப்பனுக்கு மாலை அணிந்து3 சக்கர வாகனத்தில் தனியாக சபரிமலை சென்றுள்ளார். அங்கு தரிசனத்தை முடித்து விட்டு கடந்த 16ம் தேதி ஊருக்கு புறப்பட்டார்.

தேனி, வத்தலக்குண்டு வழியாக வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து குறுக்குப்பாதையில் செல்வதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்தி அதனை பார்த்தபடி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில் உள்ள பாலத்தை கடந்தபோது ஓடை சேற்றில் சிக்கியுள்ளார். இரவு நேரமாக இருந்ததாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் அவர் சத்தம் போட்டும் உதவிக்கு யாரும் வரவில்லை. இதனால் பல மணி நேரமாக சேற்றில் சிக்கி தவித்துள்ளார். செல்போன் மூலம் கர்நாடகா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின் போலீசார், 2 மணி நேரத்திற்கும் மேலாக தேடி, செல்போன் சிக்னல் மூலம் இடத்தை கண்டறிந்து நேற்று அதிகாலை அவரை பத்திரமாக மீட்டு போலீஸ் நிலையத்தில் தங்கவைத்து, அவரது 3 சக்கர வாகனத்தில் ஊருக்கு அனுப்பி வைத்தனர்’’ என்பது தெரிந்தது. விரைந்து செயல்பட்ட தமிழக போலீசாருக்கு கர்நாடகா போலீசார் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

The post சபரிமலையில் இருந்து திரும்பியபோது கூகுள் மேப் பார்த்து வாகனம் ஓட்டி சேற்றில் விழுந்த மாற்றுத்திறனாளி: இரவு முழுவதும் தவித்த பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: