காசிமேட்டில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் கரை திரும்பியதால் நெரிசல்

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் பைபர் படைகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்வது வழக்கம். அதன்படி, தீபாவளி முடிந்தபின் நூற்றுக்கணக்கான விசைப் படகுகள் கடலுக்கு சென்றிருந்தன. அந்த படகுகள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு மொத்தமாக கரை திரும்பின. இதனால், படகுகளை நிறுத்துவதில், மீன்களை ஏலம் விடுவதில் இட நெருக்கடி ஏற்பட்டது. மொத்த வியாபாரிகள் மீன்களை ஏலம் எடுத்து சிறிய வண்டிகளில் கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். ஒரு சில விசைப்படகுளில் இருந்து மீன்களை இறக்குவதற்கே இடமில்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. சில்லரை வியாபாரிகள் பலர், மீன் ஏலம் விடும் இடத்திலேயே நூற்றுக்கணக்கான கடைகளை வைத்து வியாபாரம் செய்ததால், நடப்பதற்கே சிரமமாக இருந்தது. இதனால், பல படகு உரிமையாளர்கள் தங்கள் மீன்களை படகில் இருந்து இறக்காமல் அப்படியே வைத்திருந்தனர்.

சில்லரை வியாபாரிகளை மீன்வளத் துறை அதிகாரிகள் முறைப்படுத்தாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. சிறிய வியாபாரிகள் மீன் வியாபாரம் செய்ய ஏராளமான காலியிடம் இருந்தும், விசைப்படகுகள் அருகிலேயே கடை வைப்பதால் தங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர். கார்த்திகை மாதம் என்றாலும் ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் வந்திருந்ததால் மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. இதனால், மீன்கள் விலை குறைவாக இருந்தது. வஞ்சிரம், சங்கரா, வவ்வால், நெத்திலி, இறால், நண்டு, கடமா ஆகிய மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைவாகவே இருந்தது. இதனால், பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

 

The post காசிமேட்டில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் கரை திரும்பியதால் நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: