இதன்பிறகு தேர்தல் பத்திரம் என்ற பெயரில் பாஜவுக்கு ரூ.400 கோடி வரை மார்டின் நிறுவனம் நிதி வழங்கி உள்ளது தெரியவந்தது. இருப்பினும் அவ்வப்போது மார்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஐடி, ஈடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜவில் உள்ள மார்டினின் மகன் புதுச்சேரி அரசியலில் பாஜவுக்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்கி தேர்தலில் களம் காணும் வேலையில் தீவிரமாக இறங்கி உள்ளார். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் எம்எல்ஏவும், புதுச்சேரி முதல்வரின் நாடாளுமன்ற செயலாளருமான பாஜவை சேர்ந்தவர் ஜான் குமார். எம்எல்ஏ ஆவதற்கு முன், லாட்டரி தொழில் ஈடுபட்டு வந்தார். அப்போதிலிருந்து தமிழகத்தை சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்டினும், ஜான் குமாரும் நெருங்கிய நண்பராக இருந்து வந்தனர். இந்நிலையில், மார்டினின் மகன் ஜோஸ் சார்லசை, வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட வள்ளலார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மார்டின் மகன் சார்பில் நடந்தது. இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை ஜோஸ் சார்லஸ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியால் பாஜ மேலிடம் மீது அதிருப்தியில் உள்ள கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், பாஜ ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி நிவாஸ் அசோக் ஆகிய 6 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஜான்குமாரின் மகனான நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ ரிச்சர்ட் ஜான் குமார் பேசும்போது, ‘தனது தந்தை ஜான்குமாரை விட ஜோஸ் சார்லஸ் மார்டின் காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு பலமடங்கு மக்கள் பணி செய்வார்’ என்றார்.
இதன்மூலம் வரும் தேர்தலில் ஜோஸ் சார்லஸ் மார்டின் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட உள்ளது உறுதியாகியுள்ளது. பாஜ மேலிடம் மீது அதிருப்தியில் இருக்கும் பாஜ மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர் மற்றும் ஒரு நியமன எம்எல்ஏ ஒருவரும் மார்டின் மகன் தொடங்க இருக்கும் புதிய அமைப்போ அல்லது கட்சியிலோ இணைய தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக திருமண மண்டபத்தில் பாஜ எம்எல்ஏக்களுடன் மார்டின் மகன் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post புதுச்சேரி அரசியலில் குதிக்கும் லாட்டரி அதிபர் மார்டினின் மகன்: கைகோர்க்கும் வாரிசுகள் appeared first on Dinakaran.