டெல் அவிவ்: காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிரமாக போரிட்டு வரும் நிலையில், இஸ்ரேலில் அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. காசாவில் ஹமாஸ் படையினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற அப்பாவி மக்களை நெதன்யாகு அரசு இதுவரை மீட்காததை கண்டித்து பொதுமக்கள் பலரும் சமீபத்தில் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிசேரியா நகரில் உள்ள பிரதமர் நெதன்யாகுவுக்கு சொந்தமான வீட்டின் முன்பகுதியில் நேற்று திடீரென வெடிபொருட்கள் தீப்பற்றி எரிந்தன. பிளேர்ஸ் எனப்படும் தீப்பிடிக்கும் பொருளை மர்ம நபர்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மாதம் இதே வீட்டின் மீது ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இது நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ வீடல்ல. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. ஆனாலும் இந்த சம்பவம் இஸ்ரேலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை காட்டும் விதமாக உள்ளது. இதற்கிடையே, நீதித்துறையின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நேரம் வந்து விட்டதாக நீதித்துறை அமைச்சர் யாரிவ் லெவின் கூறியிருப்பதும் அரசியல் ரீதியாக நெதன்யாகு அரசுக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
The post காசா போருக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் வீட்டை குறிவைத்து திடீர் தாக்குதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.