மணிப்பூரில் நடக்கும் வன்முறையால் அமித் ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து: அதிகாரிகளுடன் ஆலோசனை

ஜிரிபாம்: மணிப்பூரில் நடக்கும் வன்முறையால் ஒன்றிய உள்துறை அமித் ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் மூன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால், அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்துள்ளதால் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது. நேற்று மாநில அமைச்சர் உட்பட பாஜக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின.

இருப்பினும், அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் கலவரக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர். அதனால் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் சாலையில் டயர்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது தேர்தல் பிரசார பேரணிகளை ரத்து செய்தார். டெல்லியில் அவர் மணிப்பூரில் நடக்கும் போராட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மணிப்பூரில் நடக்கும் வன்முறையால் அமித் ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து: அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: