நாகப்பட்டினம்,நவ.15: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டபேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தது.
தமிழ்நாடு சட்டபேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையில் எம்எல்ஏக்கள் கருமாணிக்கம், சதன் திருமலைக்குமார், சுதர்சன, சேவூர் ராமசந்திரன், ஓ.எஸ்.மணியன், வெங்கடேஷ்வரன், நாகை மாலி ஆகியோர் அடங்கிய குழுவினர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தந்தது. வேளாங்கண்ணி பேரூராட்சிகு உட்பட்ட பூக்கார தெருவில் மூலதன மானிய நிதியில் ரூ.337 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆய்வு செய்தனர். வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட ஆற்காட்டுதுறையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி, வேதாரண்யம் கடற்கரை சாலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருப்பூண்டி மேற்கில் நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி பேரூராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி, கீழ்வேளுர் பேரூராட்சி மற்றும் தலைஞாயிறு பேரூராட்சி மற்றும் நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர். கீழையூர், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஒன்றியங்களைச் சேர்ந்த 980 ஊரக குடியிருப்புகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாக கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.20.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில் மதிப்பீட்டு குழுத்தலைவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டபேரவை மதிப்பீட்டு குழு நேரில் ஆய்வு செய்தது. ஒரு மாவட்டத்தின் வளர்ச்சித்திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுகிறதா என்பதை சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சரியாக கிடைக்கப்பெற அரசு அலுவலர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். முதல்வர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றப்பின் பல சிறப்புமிக்க திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு சுழல்நிதி திட்டம், மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என பல திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து முதல்வர் தினந்தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதுப்புது திட்டங்களை அறிவித்து மக்கள் பயன்பாட்டிற்கு அற்பணித்து வருகிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதை தொடர்ந்து வாழ்ந்து காட்டுவோம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 56 ஆயிரத்து 366 மதிப்பில் நலத்திட்ட உதவிகள், தாட்கோ சார்பில் ரூ.7 லட்சத்து 660 மதிப்பில் முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தில் சரக்கு வாகனம், தோட்டக்கலைக்கலைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 800 மதிப்பில் நலத்திட்ட உதவி என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 60 ஆயிரத்து 826 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் ஆகாஷ், சட்ட பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர், டிஆர்ஓ பேபி, திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் சட்டபேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு appeared first on Dinakaran.