பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 10 மணிநேரம் ஆணையர் ஆய்வு: இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்


ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எ.எம்.சவுத்ரி முதற்கட்டமாக நேற்று 10 மணி நேரம் ஆய்வு செய்தார். இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. பாலத்தில் ரயிலை இயக்குவதற்கு ஒப்புதல் வழங்கும் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் இறுதிக்கட்ட ஆய்வு நேற்று துவங்கியது. பாதுகாப்பு ஆணையர் எ.எம்.சவுத்ரி நேற்று காலை 8 மணிக்கு அக்காள்மடம் லெவல் கிராசிங் நிறுத்தத்தில் இருந்து இருந்து ஆய்வை துவங்கினார். அங்கிருந்து ட்ரோலி மூலம் பாம்பன் ரயில் நிலையம் அருகே உள்ள சின்னப்பாலம் ரயில்வே கேட்டில் இறங்கி, புதிய வழித்தடத்தின் செயல்பாடுகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் பாம்பன் ரயில் நிலையம் மற்றும் புதிய ரயில் பாலத்தின் நுழைவுப்பகுதியில் கட்டமைப்பு மற்றும் சிக்னல், அறிவிப்பு குறியீடுகள் குறித்து பார்வையிட்டு பாலத்தின் உள்ளே முக்கிய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். இதில் கான்கிரீட் தூண்களின் மேலே பொருத்தப்பட்டுள்ள இரும்பு கர்டர்களின் உறுதி திறன், கட்டமைப்பு, சீரான நிலை, தண்டவாளத்தின் இடைவெளி, அவசர கால பாதுகாப்பு, ஊழியர்கள் செல்லும் வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து செங்குத்து தூக்குப்பாலத்தின் சமநிலை, சென்சார் தொழில்நுட்பம், சிக்னல் தொடர்பு, பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்டவை ஆய்வு செய்தார். தூக்குப் பாலத்தை இயக்கும் ஆபரேட்டர் அறைக்குள் சென்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். பின்பு பிற்பகல் 3 மணியளவில் தூக்குப்பாலத்தில் இருந்து மண்டபம் நோக்கி உள்ள ரயில் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து மாலை 6 மணிக்கு முதல்கட்ட ஆய்வை நிறைவு செய்தார்.

பாம்பன் – மண்டபம் இடையே சுமார் 10 மணிநேரம் நடந்த ஆய்வில் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து உறுதி செய்யப்பட்டது. இதில் ஆர்விஎன்எல் தலைமை திட்ட மேலாளர் கமலாகர், கட்டுமான பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி அமித் குமார் மனுவால், மதுரை கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா உள்ளிட்ட பல்வேறு பிரிவு முதன்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதி கட்டப் பாதுகாப்பு ஆய்வு என்பதால் தெற்கு ரயில்வே மற்றும் ஆர்விஎன்எல் அனைத்து பிரிவு முதன்மை அதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டதால் புதிய ரயில் பாலத்தில் அதிகாரிகள் நிறைந்து காணப்பட்டனர்.

இதை தொடர்ந்து இன்று (நவ. 14) 2ம் நாள் ஆய்வில் புதிய ரயில் பாலத்தில் அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறும். இதில் பாலத்தின் அதிர்வு மற்றும் உறுதித்திறன் ஆய்வு செய்யப்படும். பின்னர் செங்குத்து தூக்குப்பாலத்தை உயர்த்தி, இறக்கி இன்று ஆய்வு செய்யவுள்ளார். இதன்பின் ரயில்வே உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு புதிய ரயில் பாலத்தில் ரயில் சேவையை துவங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

The post பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 10 மணிநேரம் ஆணையர் ஆய்வு: இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: