ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயம் உள்ளது. தேயிலை, காய்கறி விவசாயத்திற்கு தேவையான யூரியா, டிஏபி, பொட்டாஸ் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனையாளர்கள் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் யூரியா, டிஏபி, பொட்டாஸ் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என கண்காணிக்கப்பட்டு உரங்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்படுகிறதா? இணை பொருட்கள் வாங்குமாறு விவசாயிகள் வற்புறுத்தப்படுகிறார்களா? உரங்கள் விற்பனை முனைய கருவிகள் மூலம் ஆதார் எண் கொண்டு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளுமாறு தமிழக வேளாண்மை இயக்குநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் தரக்கட்டுப்பாட்டு துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுபாடு) லாவண்யா ஜெயசுதா தலைமையில் வேளாண் அலுவலர்கள் காயத்ரி, அமிர்தலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் விதிமீறலில் ஈடுப்பட்ட இரண்டு உர விற்பனை கடைகளில் விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளர்கள் தங்களிடம் உரங்கள் வாங்க வரும் விவசாயிகளை இணை பொருட்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது.
உர மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட அதிக விைல வைத்து விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகள் வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீதினை தவறாமல் கொடுக்க வேண்டும். உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மீறி விற்பனை செய்யும் உர விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post விதி மீறலில் ஈடுபட்ட 2 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை appeared first on Dinakaran.