கோவை, நவ. 13: கோவை பீளமேட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு இரண்டு நாள் கண்காட்சி நேற்று துவங்கியது. இக்கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் மற்றும் அது தொடர்பான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சியை கோவைபெக்ஸ்-2024யை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கிவைத்தார்.
இதில், அஞ்சல் துறை தலைவர் சரவணன், செயலாளர் நாராயணசுவாமி, மூத்த முதன்ைம விஞ்ஞானி ப்ரமொட் பத்மநபன், கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர், ஈரோடு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கண்காட்சியில், கோவைபெக்ஸ்-2024 சிறப்பு தபால்உறை, மை ஸ்டம்ப், டாக்டர் சலிம் மொய்சுதீன் அப்துல் அலி தபால் உறை, புகைப்பட அஞ்சல் அட்டை ஆகியவை இடம்பெற்றிருந்தது.
தவிர, பள்ளி மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி, மேஜிக் நிகழ்ச்சி, கடித பரிமாற்றம் வொர்க் ஷாப், அஞ்சல் ஊழியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், நேற்று நடந்த முதல் நாள் கண்காட்சியை 20 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர். 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டு அஞ்சல் தலைகளை சேகரித்தனர். மேலும், அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.
The post மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி appeared first on Dinakaran.