மாவட்டச் செயலாளர் முன்னிலையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி மோதல்: திருத்தணியில் பரபரப்பு

திருத்தணி: திருத்தணி நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் – நகரச் செயலாளர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நகரச் செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் கோ.அரி பேசுகையில், திருத்தணி நகரில் அதிமுகவைச் சேர்ந்த சிலர் கட்சிக்கு துரோரம் செய்தவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தால் எப்படி கட்சி வலிமை பெறும் என்று விமர்சித்து பேசினார். இதனால் விழா மேடையில் அமர்ந்திருந்த நகரச் செயலாளர் சவுந்தர்ராஜன் ஆவேசத்துடன் எழுந்து நின்று கோ.அரியைப் பார்த்து இனி அவ்வளவுதான், விட்டா பேசிக்கிட்டே இருக்கீங்க, நீ எப்படி பேசினாலும் கேட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கணுமா என்று பேச, பதிலுக்கு, எல்லாம் தெரியும், நான் சரியாதான் பேசுறேன், போய் உட்காருங்க என்று கோ.அரியும் தனது மேடை பேச்சை தொடர்ந்தார். மாவட்டச் செயலாளர் முன்னிலையில் நடைபெற்ற கோஷ்டி மோதல் சம்பவம் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இறுதியில் பேசிய பி.வி.ரமணா, நிர்வாகிகள் கோஷ்டிகள் மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கட்சியில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டு பிரிந்து செயல்பட்டால், 20026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெற முடியும் என்று தனது குமுறலை வெளிப்படுத்தினார்.

The post மாவட்டச் செயலாளர் முன்னிலையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி மோதல்: திருத்தணியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: