பிசி, எம்பிசி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை முறையாக அளவீடு செய்யக்கோரி மனு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டை வட்டம், மெய்யூர் கிராமத்தில் கடந்த 2000வது ஆண்டில் நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ், 180 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால் வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என தெரிகிறது.

ஆனால் தற்போது வீடு கட்டாத மனைகளின் பட்டாவை ரத்து செய்வதாக வருவாய் துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட கலெக்டரை சந்திக்க 5 பேரை மட்டும் அனுமதிப்பதாக போலீசார் தெரிவித்ததால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மனு அளிக்க காவல் துறை அனுமதி அளித்ததையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமாரிடம், வழக்கறிஞர்கள் ஏ.வேல்முருகன், பி.மதன்குமார், குமார், பி.கணபதி தமிழ்வாணன் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்து விளக்கிக் கூறினர். அப்போது 24 ஆண்டுகளாக நிலத்தை அளவீடு செய்யாமல் அலைக்கழித்த நிலையில் நிலத்தை முறையாக அளவீடு செய்து வழங்கினால் வீடு கட்டி குடியேறத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பாரதி, சுப்பிரமணி, பாலாஜி, ஆறுமுகம், ராஜா, பாரதி, ஹேமாவதி, பாரதி, சரஸ்வதி, சரளா, நிர்மலா உட்பட 100க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

The post பிசி, எம்பிசி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை முறையாக அளவீடு செய்யக்கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: