வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.60 கோடியில் நவீனமயமாகும் புளியந்தோப்பு இறைச்சி கூடம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

மாதவரம்: புளியந்தோப்பு இறைச்சிக் கூடம் நவீன முறையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் வெளியிடப்படும், என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், அம்பத்தூர், புளியந்தோப்பு ஆகிய 4 இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான இறைச்சிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள ஆடுதொட்டி பழமை வாய்ந்தது. 1903ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆடு தொட்டி, 9.5 ஏக்கர் பரப்பளவில் சென்னையில் மிகப்பெரிய இறைச்சி கூடமாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆடு தொட்டிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து ஆடுகள் கொண்டு வருகின்றன. தினசரி 2,000 ஆடுகள் வரை இங்கு இறைச்சிக்காக வெட்டப்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஒரு நாளைக்கு 4,000 ஆடுகள் வரை இந்த பகுதியில் வெட்டப்படுகின்றன.

மேலும் இந்த பகுதியில் மாடு தொட்டியும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு நாளைக்கு 100 மாடுகளும், விடுமுறை நாட்களில் 200க்கும் மேற்பட்ட மாடுகளும் இப்பகுதியில் வெட்டப்படுகின்றன. சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இங்கு இருந்து இறைச்சிகள் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் புளியந்தோப்பு இறைச்சி கூடத்தை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

அதற்கு ஏற்ற வகையில் அவர்களது வாழ்வாதாரம் மேம்பட இந்த ஆடுதொட்டியை மறு சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில், புளியந்தோப்பில் ரூ.48 கோடியில் நவீன இறைச்சிக் கூடம் அமைக்க டெல்லியை சேர்ந்த ‘ஹிந்த் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. நவீன இறைச்சிக் கூடம் கட்டும் பணியை 2009 செப்டம்பரில் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 9 ஏக்கரில் அமைந்துள்ள பழமையான இறைச்சிக் கூடத்தை மாற்றியமைத்து நவீன இறைச்சிக் கூடம், பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், இறைச்சிக் கூடத்தை வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கிடப்பில் போடப்பட்ட நவீன இறைச்சி கூட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு எதிராக இருந்த வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் பணிகளை தொடங்கி இப்பகுதியில் சுகாதாரமான சூழல் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறியதாவது: புளியந்தோப்பில் உள்ள பழமையான இந்த இறைச்சிக் கூடத்தில் 2,000 முதல் 5,000 ஆடுகளும், 100 முதல் 200 மாடுகளும் வெட்டப்படுகின்றன.

இந்த இறைச்சிக் கூடத்தில் மட்டும் தான் மாடுகள் வெட்டும் வசதி உள்ளது. இந்த இறைச்சிக் கூடத்தை வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.60 கோடி மதிப்பில் இதற்கான பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்தது. இந்நிலையில், புளியந்தோப்பு இறைச்சிக் கூடத்தை நவீன முறையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது, மேலும், 3 இறைச்சிக் கூடங்களை நவீனப்படுத்துவதற்கான மதிப்பீடுகள் தயாராகி வருகிறது. இவ்வாறு கூறினார்.

The post வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.60 கோடியில் நவீனமயமாகும் புளியந்தோப்பு இறைச்சி கூடம்: மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: