?பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த நாள் போல் சிவபெருமானுக்கு உகந்த நாள் எது?


– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள் ஆகும். திங்கள் என்று அழைக்கப்படும் சந்திரனை தனது தலையில் சூடி பிறைசூடனாக காட்சி அளிப்பவர் சிவபெருமான். சோமாஸ்கந்தர் என்பது சிவபெருமான் தனது குடும்பத்துடன் காட்சியளிக்கும் திருவுருவத்தின் பெயர். சோமன் என்ற வார்த்தை சந்திரனைக் குறிக்கும். பிரதோஷ நாட்களில்கூட சனிக்கிழமையில் வரும் சனி பிரதோஷத்தைவிட, திங்கள் அன்று இணையும் சோமவார பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமையில் செல்வதை வழக்கத்தில் கொண்டிருப்பவர்கள், சிவாலயத்திற்கு திங்கட்கிழமை தவறாமல் சென்று வருவார்கள். திங்கட்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள்ளாக சந்திர ஹோரை வேளையில் சிவாலயத்தின் வெளிபிராகாரத்தை 11 முறை வலம் வந்து வணங்கினால் கேட்கும் வரம் உடனடியாக கிடைக்கும் என்பார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள்.

?‘ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்’ என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?

– மணிகண்டன், நெல்லிக்குப்பம்.
‘அவங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்….’ என்று எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தம்பதியைப் பார்த்துச் சொல்வது வழக்கம். உண்மையில் ஏழாம் பொருத்தம் நன்றாய் இருந்தால் மிகவும் அன்யோன்யமாய் இருப்பார்கள். பின் எப்படி இந்த சொற்றொடர் வழக்கில் வந்தது? ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஏழாம் இடம் என்பது ஒரு ஆணுக்கு அவனது மனைவியையும், பெண்ணுக்கு அவளது கணவனையும் குறிக்கும். ஏழாம் இடம் என்பது வாழ்க்கைத் துணைவரை மட்டுமல்லாது நண்பர்கள், பழகும் தன்மை, வெளிவட்டாரத் தொடர்பு என பல்வகைப்பட்ட அம்சங்களைக் குறிக்கும். லக்னம் என்பது ஜாதகரின் குணாதிசயத்தையும், ஏழாம் இடம் என்பது அவனது தொடர்பாளர்களின் குணங்களையும் குறிக்கும். லக்னம் 0 டிகிரி என்றால் ஏழாம் இடம், அதன் நேரெதிர் துருவமான 180வது டிகிரி ஆகும். ஒரு காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் ஒன்றோடொன்று ஈர்ப்பு கொள்வது இயற்பியல் விதி. ஜோதிட ரீதியாக சற்று விளக்கமாகவே பார்ப்போம்.மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். அதன் ஏழாவதான துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன்.

செவ்வாய் வீரமுடைய, ஆண்மைத்தன்மை உடைய கிரஹம். சுக்கிரனோ அழகு நிறைந்த, பெண்மைத்தன்மை நிறைந்திருக்கும் கிரஹம். இவர்கள் இருவரும் அடிப்படையில் நேரெதிரான குணங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு உள்ளவர்கள். இதே கருத்து சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷபத்திற்கும் அதன் ஏழாமிடமான விருச்சிகத்திற்கும் பொருந்தும்.அதே போல் மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன். அவற்றின் ஏழாம் ராசிகளான தனுசு, மீனத்திற்கு அதிபதி குரு. இயற்கையில் குரு நீதி, நேர்மை, நியாயம் என்று நேரான வழியில் பயணிப்பவர். எதற்காகவும் தன் கொள்கையைத் தளர்த்திக் கொள்ளாதவர். புதன் இடத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை படைத்தவர். சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் எதற்கெடுத்தாலும் கௌரவம் பார்ப்பார்கள். கௌரவத்திற்குக் குறைவான செயலை ஒருபோதும் செய்யமாட்டார்கள்.

அதேநேரத்தில் அதற்கு ஏழாமிடமான கும்ப ராசிக்கு அதிபதி சனி. சனியை ராசிநாதனாகக் கொண்டவர்கள் கௌரவம் பார்க்காமல் காரியத்தில் மட்டும் கண்ணாய் இருப்பார்கள். சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் அமைதி, அடக்கம், சுறுசுறுப்பு, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர்கள். கடகத்திற்கு ஏழு ஆகிய மகரத்திற்கு அதிபதி சனி என்பதால் சோம்பல், அழுக்காய் இருத்தல் என நேரெதிர் குணங்களை நிரம்பப் பெற்றவர்கள். திருமணத்திற்கு பத்து பொருத்தம் பார்க்கும்போது ஏழாவதாக வருகின்ற ராசி அதிபதி பொருத்தம் என்பதும் இந்த அடிப்படையில் வகுக்கப்பட்டதே ஆகும். ராசி அதிபதி பொருத்தம் நன்றாக இருந்தால் ரஜ்ஜு உட்பட வேறெந்த பொருத்தமும் பார்க்க தேவையில்லை என்பது முக்கியமான ஜோதிட விதி. ராசிகளும் அவற்றின் ஏழாம் ராசிகளும் பின்வருமாறு: மேஷம், துலாம் (செவ்வாய், சுக்கிரன்); ரிஷபம், விருச்சிகம் (சுக்கிரன், செவ்வாய்); மிதுனம், தனுசு (புதன், குரு); கடகம், மகரம் (சந்திரன், சனி); சிம்மம், கும்பம் (சூரியன், சனி); கன்னி, மீனம் (புதன், குரு). மேற்கண்டவாறு ராசிகளைக் கொண்ட தம்பதிகள் தங்களுக்குள் சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் அவர்களுக்குள் அன்யோன்யம் அதிகமாக இருக்கும். பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையும் பிறரைவிட அதிகமாகக் கொண்டிருப்பார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ‘அவங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்!’ என்பதை இனி ஆதர்ஷ தம்பதியரைப் பார்த்தும்
சொல்லலாம் அல்லவா!

?சர்வ அமாவாசை, போதாயன அமாவாசை என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

– ரா.விஸ்வநாதன், பண்ருட்டி.
பொதுவாக, அபரான்ன காலம் என்று நிர்ணயிக்கப்படுகின்ற மதியம் 2 மணி சுமாருக்கு என்ன திதி இருக்கின்றதோ, அதுவே அன்றைய சிராத்த திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒருநாளில் பகல் 2 மணிக்கு மேல் அதாவது, 20 நாழிகைக்கு மேல் அமாவாசை திதிவரும் பட்சத்தில் அந்த நாளை போதாயன அமாவாசை நாள் என்று குறிப்பிடுவர். மாறாக மதியம் 2 மணி வரை அமாவாசை திதி இருந்தால் அந்த நாளை சாதாரணமான அமாவாசை என்று குறிப்பிட்டிருப்பார்கள். பொதுவாக அமாவாசை தர்ப்பணம் செய்பவர்களும், அமாவாசை நாளில் வீட்டில் முன்னோர்களுக்காக இலைபோட்டு படைப்பவர்களும், அமாவாசை விரதம் இருப்பவர்களும் சாதாரணமாக வருகின்ற அமாவாசை நாளில்தான் செய்ய வேண்டும். போதாயன சூத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் போதாயன அமாவாசை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் செய்ய வேண்டும்.

?சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோயில்களில் உள்ள வன்னிமரத்தை சுற்றக்கூடாது என்கிறார்களே, உண்மையா? விளக்கம் தேவை.

– டி.ரவி, சென்னை.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கோயில்களில் உள்ள வன்னிமரம் மட்டுமல்ல, வேறெந்த இடத்தில் உள்ள எந்த மரத்தையும் சுற்றக்கூடாது. பகல்பொழுதில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின்போது மரங்கள் கார்பன்டைஆக்ஸைடை உட்கொண்டு சுத்தமான ஆக்சிஜன் வாயுவை வெளியேற்றுகின்றன. சுத்தமான ஆக்சிஜன் வாயுவை நாம் சுவாசிக்கும்போது உடல் ஆரோக்யம் பெறுகிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பின் ஒளிச்சேர்க்கை நடைபெற வாய்ப்பு இல்லாததால், தாவரங்கள் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன்டைஆக்ஸைடு வாயுவினை வெளியேற்றுகின்றன. இதனை சுவாசிப்பதால் மனிதனின் உடல் ஆரோக்யம் கெடும் என்பதால் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் மரங்களின் அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்கிறது அறிவியல். இந்த அடிப்படையில்தான் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் ஸ்தல விருட்சங்களை வலம்வந்து வணங்க வேண்டாம் என்கிறது ஆன்மிகம்.

அருள்ஜோதி

 

The post ?பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த நாள் போல் சிவபெருமானுக்கு உகந்த நாள் எது? appeared first on Dinakaran.

Related Stories: